Delhi Crime: இளம்பெண் இரும்பு கம்பியால் அடித்து கொலை... டெல்லியில் என்ன நடக்குது? அடுத்தடுத்து கொடூரம்!
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Delhi Crime: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
டெல்லியில் தொடரும் கொடூரங்கள்:
சமீப காலமாகவே, குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நாட்டின் தலைநகர் டெல்லியில் நடக்கும் குற்றசெயல்கள் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. டெல்லியில் நிகழ்ந்த ஷ்ரத்தா கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, இதேபோன்ற கொலை சம்பவங்கள் பல்வேறு மாநிலங்களில் நிகழ்வது மக்களை உச்சக்கட்ட அச்சத்தில் ஆழ்த்தியது. இப்படி நாளுக்கு நாள் ஒரு குற்றச் சம்பவங்கள் டெல்லியில் அரங்கேறி வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லி மாளவியா நகரில் இளம்பெண் ஒருவர் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இவர் கமலா நேரு கல்லூரியில் படிக்கும் நக்ரிஸ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
டெல்லி கமலா நேரு கல்லூரிக்கு அருகில் ஒரு பூங்கா உள்ளது. இங்க மாணவி நர்கிஸ் கல்லூரி முடிந்து பூங்காவிற்கு தனது தோழியுடன் சென்றிருக்கிறார். அப்போது, அங்கு வந்த ஒரு நபர் நர்கிஸிடம் பேச்சு கொடுத்துள்ளார். பின்னர், இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் அந்த நபர், நர்கிஸை அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து கொடூரமாக அடித்துள்ளார். இதனால் நர்கிஸ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
பின்னர், சிறிது நேரத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார். பெண் சடலம் கிடப்பது குறித்து டெல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 28 வயதான இர்பானை கைது செய்துள்ளனர்.
என்ன காரணம்?
இளம்பெண் நர்கிஸ், இர்பானை காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இவர்களது காதல் குறித்து இரு குடும்பத்தினரிடம் அவரவர்கள் தெரிவித்தனர். இதற்கு நர்கிஸ் வீட்டில் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், நர்கிஸிடம் தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார் இர்பான். இதனால் இளம்பெண் நர்கிஸ் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். இர்பானின் நம்பரையும் பிளாக் செய்து வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்த இர்பான் சம்பவத்தன்று ஒரு முடிவு கட்ட நர்கிஸை பார்க்கச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே திருமணம் குறித்து மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து நர்கிஸின் தலையில் அடித்தே கொலை செய்துள்ளார் இர்பான்.
கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றிரவு 40 வயதுடைய பெண்ணை, நடுரோட்டில் வைத்தே ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். அதன்பின் அவரும் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அடங்குவதற்குள், இன்று பட்டப்பகலில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்டிப்பது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.