crime: ஒரு பெண்ணுடன் 2 பேருக்கு திருமணத்திற்கு மீறிய உறவு... கொலை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு வீரர்.. என்ன நடந்தது?
திண்டுக்கல் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஜல்லிக்கட்டு வீரர் கொலை. கள்ளக்காதலி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே உள்ள ஆலம்பாடி எ எனும் கிராமத்தில் கொல்லப்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் கடந்த 9-ந்தேதி இரவு ஆண் சடலம் ஒன்று கிடந்தது குறித்த தகவலறிந்த தீயணைப்பு படையினர், குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குளத்தில் மிதந்தவரின் உடலை மீட்டனர். இறந்தவரின் விபரம் பற்றி போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர், திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்த மணி (23) என்றும், அவர் ஜல்லிக்கட்டு வீரர் என்பதும் தெரியவந்தது. அவரை கை, கால் மற்றும் வாயை கட்டி கொடூரமாக கொலை செய்து உடலில் கல்லை கட்டி குளத்தில் வீசி இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டு வீரர் மணியை கொலை செய்தது தொடர்பாக கருங்குளத்தை சேர்ந்த ஒரு பெண் மற்றும் கரூரை சேர்ந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முறையான பதில் ஏதும் தராததால் அவர்கள் மீது போலீசார் சந்தேகமடைந்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் மணியை கொலை செய்தது தொடர்பாக பாலசுப்பிரமணி (47), அவரது மகன் பரத்ராஜ் (19), சுரேஷ் (42) மற்றும் கருங்குளத்தை சேர்ந்த மூக்காயி (33) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.
திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மனைவி மூக்காயி. பாலசுப்பிரமணி குடும்பத்துடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புக்காக கரூருக்கு சென்றார். அப்போது கரூரில் வசித்து வரும் மற்றொரு பாலசுப்பிரமணியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் பாலசுப்பிரமணியிடம் கடனாக மற்றொரு பாலசுப்பிரமணி பணம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை வசூல் செய்வதற்காக அவர், பாலசுப்பிரமணி வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது மூக்காயிக்கும், மற்றொரு பாலசுப்பிரமணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இதையறிந்த பாலசுப்பிரமணி தனது மனைவியை கண்டித்துள்ளார். பின்னர் அவர்கள் கருங்குளத்துக்கு குடியேறினர். இதனால் அவர்களிடம் இருந்து பணம் வசூல் செய்ய கருங்குளத்தில் உள்ள ஜல்லிக்கட்டு வீரர் மணியிடம், மற்றொரு பாலசுப்பிரமணி கூறினார். அதன்படி மூக்காயி வீட்டுக்கு சென்று மணி பணத்தை வசூல் செய்துள்ளார். இதில் மூக்காயியுடன் மணிக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டது. இது மற்றொரு பாலசுப்பிரமணிக்கு தெரியவந்தது. இதனால் மணியை தீர்த்து கட்ட அவர் முடிவு செய்ததாகவும், இதைத்தொடர்ந்து கரூரில் மணிக்கு வேலை வாங்கி தருவதாக பாலசுப்பிரமணி கூறினார். இதை நம்பி கடந்த 4-ந்தேதி மணி கரூர் சென்றார்.
அங்கிருந்து பாலசுப்பிரமணி, அவரது மகன் பரத்ராஜ், உறவினர் சுரேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து மணியை ஒரு வேனில் குஜிலியம்பாறை அருகே கோட்டாநத்தத்தில் உள்ள கொடியரசு என்பவரின் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவரை சரமாரியாக தாக்கினர். இதில் மயங்கிய மணியை ஒரு சாக்குமூட்டையில் கட்டினர். பின்னர் அவரை ஒரு வேனில் வைத்து குஜிலியம்பாறை அடுத்த கொல்லப்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரி குளத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மணியின் கை, கால்கள் மற்றும் வாயை கட்டி, கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் உடலில் கல்லை கட்டி குட்டையில் தூக்கி வீசி சென்றுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.