Crime: சிகரெட்டால் சூடு.. சித்ரவதை.. இரண்டாவது கணவனுடன் சேர்த்து குழந்தைக்கு தாய் செய்த கொடூரம்..
சென்னை அடையாறு அருகே திருமண வாழ்க்கைக்கு தடையாக இருந்ததாக, குழந்தையை இரண்டாவது கணவனுடன் சேர்ந்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடையாறு அருகே இரண்டாவது திருமண வாழ்க்கைக்கு தடையாக இருந்ததாக, குழந்தையை இரண்டாவது கணவனுடன் சேர்ந்து தாய் கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடையாறு சாஸ்திரி நகர், 7வது லேன் பகுதியை சேர்ந்தவர் கன்னியம்மா, இவருக்கு 28 வயதான பானு என்ற மகள் உள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விமல்ராஜ் என்பவருடன் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஏஞ்சல் என்ற பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக, பானு கடந்த ஒரு ஆண்டாக தனது கணவர் விமல்ராஜை பிரிந்து, அதே பகுதியில் வசித்து வந்தார். பின்னர் அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகனும், பானுவும் 2-வது திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பானு தனது குழந்தை ஏஞ்சலுடன் ஜெகன் வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் பானு கன்னியம்மாவுக்கு போன் செய்து குழந்தை ஏஞ்சலுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இதையடுத்து, கன்னியம்மா பானு வீட்டுக்கு சென்று குழந்தையை பார்த்தார். அப்போது குழந்தை ஏஞ்சல் முகத்தில் காயம், சூடு வைத்த தழும்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் குழந்தையை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உடனே சாஸ்திரி நகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், விரைந்து வந்த காவல்துறையினர், இதுகுறித்து கன்னியம்மாவிடம் விசாரணை நடத்தினர். அதில், 2வது திருமண வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததால், பானு தனது 2-வது கணவர் ஜெகனுடன் சேர்ந்து குடிபோதையில், முதல் கணவருக்கு பிறந்த குழந்தை ஏஞ்சலை அடித்து, சிகரெட்டால் சூடுவைத்து துன்புறுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் பானு, அவரது இரண்டாவது கணவர் ஜெகன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.