Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Chennai Airport Gold Smuggling: சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் ரூ.167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலைச் சேர்ந்த 9 பேரை கைது
சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் ரூ.167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலைச் சேர்ந்த 9 பேரை கைது செய்து சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் அதிரடி நடவடிக்கை.
தனிப்படை தீவிர விசாரணை
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக தங்கம் நடத்தும் செயல்கள் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும், சென்னை சர்வதேச விமான நிலைய புறப்பாடு பகுதியில், பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடையை மையமாக வைத்து, இந்தக் கடத்தல் நடப்பதாகவும் வந்தது. இதை அடுத்து சுங்கத்துறை தனிப்படை தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த youtuber சபீர் அலி என்பவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, இந்த பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை, சென்னை சர்வதேச விமான நிலையத்தில், ரூபாய் பல லட்சம் முதலீடு செய்து, முறைப்படி இந்திய விமான நிலைய ஆணையத்தின் அனுமதியுடன் தொடங்கி நடத்தி வருகிறார்.
கழிவறையில் மறைத்து வைத்து
அந்த கடையில் ஏழு பேர்களை பணிக்கு அமர்த்தியுள்ளார். அவர்கள் அனைவருக்கும், சென்னை விமான நிலையத்தில், அனைத்து பகுதிகளுக்கும் இன்று வருவதற்கான, சிறப்பு அனுமதி உடன் பி.சி .ஏ எ.ஸ் பாசும் வாங்கி இருந்தார். அதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து ட்ரான்சிட் பயணிகள் கடத்திக் கொண்டு வரும் தங்கம் கட்டிகளை, விமான நிலையம் பாதுகாப்பு பகுதியில் உள்ள கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு, சபீர் அலிக்கு சென்று விடுவார்கள்.
சபீர் அலி, தனது கடையில் உள்ள ஊழியர்களை அனுப்பி, அவர்கள் தங்கத்தை தங்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு வெளியில் கொண்டு வந்து, எந்தவித சுங்கச் சோதனையும் இல்லாமல், கடத்தல் கும்பல் இடம் கொடுத்து அனுப்பி விடுவார்கள். இவ்வாறாக கடந்த இரண்டு மாதங்களாக இந்த கடத்தல் தொழில், சென்னை விமான நிலையத்தில் கொடி கட்டி பறந்து நடந்துள்ளது.
கையும் களவுமாக பிடித்து
இந்தநிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, துபாயில் இருந்து ரூபாய் ஒரு கோடி மதிப்புடைய 1.6 கிலோ தங்கத்தை இலங்கை பயணி ஒருவர் கடந்து கொண்டு வந்து, சென்னை விமான நிலைய கழிவறைக்குள் மறைத்து வைத்துவிட்டு வெளியில் வந்த போது, சுங்க அதிகாரிகள், அவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது இது பற்றிய முழு தகவல்கள் வெளிவந்தனை.
இதை அடுத்து சுங்க அதிகாரிகள் இலங்கை சேர்ந்த கடத்தல் பயணி, சென்னை விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வரும் சபீர் அலி, அவர் கடையில் பணியாற்றும் ஏழு ஊழியர்கள் ஆகிய 9 பேரை கைது செய்து, மேலும் தொடர்ந்து விசாரணையில் நடத்தி வருகின்றனர்.
267 கிலோ தங்கம்
இந்த கடத்தல் கும்பலில் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு கடந்த இரண்டு மாதங்களில், கடத்தல் செய்யப்பட்ட ரூபாய் 167 கோடி மதிப்புடைய, 267 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.