டிஜிட்டல் கைது மோசடி: உச்ச நீதிமன்றம் தலையீடு! மோசடிகளை இரும்புக்கரம் கொண்டு தடுக்க மத்திய அரசின் முயற்சி..
உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை அண்மையில் விசாரித்த நிலையில், மக்களின் பாதுகாப்பைக் கருதி மத்திய அரசு இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் டிஜிட்டல் கைது மோசடிகள் மீது மத்திய அரசு தனது பிடியை இறுக்கியுள்ளது. இதுபோன்ற சைபர் குற்றங்களை ஆழமாக விசாரிக்க பல்வேறு புலனாய்வு நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட உயர்மட்ட பல நிறுவனக் குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.
உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை அண்மையில் விசாரித்த நிலையில், மக்களின் பாதுகாப்பைக் கருதி மத்திய அரசு இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் தலைமையில் செயல்படும் இந்தக் குழுவில் சிபிஐ (CBI), என்ஐஏ (NIA), டெல்லி காவல்துறை ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம், வெளியுறவு, நிதி மற்றும் சட்ட அமைச்சகங்களின் இணைச் செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மோசடியின் பின்னணி மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தலையீடு
ஹரியானாவைச் சேர்ந்த முதிய தம்பதியினர், விசாரணை அதிகாரிகள் போல் நடித்து மோசடி செய்த கும்பலிடம் பல கோடி ரூபாயை இழந்ததாகக் கூறி உச்ச நீதிமன்றத்தை அணுகியதைத் தொடர்ந்து இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. மக்களைப் பயமுறுத்துவதற்காக நீதிமன்ற முத்திரைகள் மற்றும் சட்டப்பூர்வ நிறுவனங்களின் பெயர்களைக் குற்றவாளிகள் பயன்படுத்துவது நீதித்துறையின் மீதான நேரடித் தாக்குதல் என்று உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான கருத்துகளைப் பதிவு செய்தது. இதன் தொடர்ச்சியாகவே, டிஜிட்டல் கைது மோசடிகளின் தன்மை, அவற்றின் பின்னணியில் உள்ள வெளிநாட்டு ஆதாரங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனை வழிகளை ஆராய இந்தக் குழு தற்போது களமிறக்கப்பட்டுள்ளது.
கடுமையான நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டம்
மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழு, இதுபோன்ற குற்றங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி பரிந்துரைகளை வழங்கும். குறிப்பாக வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் கடுமையான பொறுப்புக்கூறலைக் கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கும், சைபர் தாக்குதல்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும் ஒரு ஒருங்கிணைந்த தேசிய உத்தியை இந்தக் குழு உருவாக்கும். இது தொடர்பான விரிவான செயல் திட்டத்தைச் சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு ஒரு மாத கால அவகாசம் கோரியுள்ளது.






















