திருச்சியில் சி.பி.ஐ. அதிகாரி போல் மிரட்டி பெண் சாப்ட்வேர் என்ஜினீயரிடம் ரூ.16 லட்சம் மோசடி
திருச்சியில் சமீப காலமாக ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி விசுவாஸ் நகர் மெயின் ரோடு 3-வது கிழக்கு குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் மலைக்கொழுந்து. இவரது மகள் விஜயலட்சுமி (வயது 30). பெங்களூரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது வீட்டிலிருந்து பணியாற்றி வரும் அவரது செல்போனுக்கு கடந்த 12-ந்தேதி அடையாளம் தெரியாத ஒரு நபர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பெட் எக்ஸ் கொரியர் நிறுவனம் மூலம் தாங்கள் விலை உயர்ந்த பொருட்களை தைவான் நாட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறீர்கள். உங்களது வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கில் பணம் சேர்ந்துள்ளது. இது தொடர்பாக உங்கள் மீது நான் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளேன் என கூறியுள்ளார். இதைக் கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அடுத்த சில நிமிடங்களில் வாட்ஸ்அப் காலில் இன்னொருவர் தொடர்பு கொண்டார். அவர் தன்னை சி.பி.ஐ. அதிகாரி என்று அறிமுகம் செய்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் உங்களுடைய பண பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ய வேண்டி இருக்கிறது. ஆகவே உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் தொகையினை மும்பை பைனான்ஸ் டிபார்ட்மெண்ட்ஸ் அக்கவுண்ட் என்ற பெயரில் இருக்கும் வங்கி கணக்குக்கு தொகையை அனுப்பி வையுங்கள். விசாரணைக்கு பின்னர் அந்தத் தொகை உங்கள் வங்கி கணக்கில் வந்து சேர்ந்துவிடும் என தெரிவித்துள்ளார்.
மேலும் எந்தத் தவறும் செய்யாத நிலையில் தான் சம்பாதித்த பணம் திரும்ப வந்துவிடும் என்ற நம்பிக்கையில், எதையும் யோசிக்காமல், யாரிடமும் சொல்லாமல் உடனடியாக தனது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.16 லட்சத்து 44 ஆயிரத்து 876 தொகையினை அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்குக்கு ஆன்லைன் மூலமாக அனுப்பி வைத்தார். அதன் பின்னர் மாலையில் அந்த நபருக்கு விஜயலட்சுமி தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த விஜயலட்சுமி உடனடியாக திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் சிந்துநதி உடனடியாக அந்த வங்கி கணக்கை முடக்க நடவடிக்கை மேற் கொண்டார். ஆனால் அதற்கு முன்பாகவே அந்த மோசடி பேர் வழிகள் விஜயலட்சுமி அனுப்பிய ரூ.15 லட்சம் தொகையினை எடுத்து விட்டனர். ரூ.1 லட்சம் மட்டுமே அந்த கணக்கில் இருந்தது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருகிறது. இந்த நூதன மோசடி குறித்து இன்ஸ்பெக்டர் சிந்துமதியிடம் கேட்டபோது, ஏமாற்றப்பட்ட பெண் என்ஜினீயர் மாதம் ரூ.ஒன்றரை லட்சம் சம்பளம் வாங்குகிறார். அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். பயத்தில் யாரிடமும் கலந்தாலோசிக்காமல் பணத்தை அனுப்பி ஏமாந்து விட்டார். படித்தவர்கள் இந்த அளவுக்கு ஏமாறுவது கவலை அளிக்கிறது என்றார். திருச்சியில் சமீப காலமாக ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்