Youtube Prankster Surya | பல பேருடன் காதல்....மோசடி யூ ட்யூபரால் இளம்பெண் தற்கொலை!
தொடக்கத்தில் ஒளிப்பதிவு தொடர்பாக பேசி வந்த இருவரும் பின்னர் நண்பர்கள் போல நெருக்கமாக பழகி வந்துள்ளனர். செல்போன் மூலமாக தொடர்ந்து வந்த அவர்களது நட்பு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் யூ ட்யூப் சேனல்கள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளன. இதனால். பலரும் தங்களது திறமையை வெளிக்காட்டுவதற்காக யூ ட்யூப் தொலைக்காட்சி தொடங்கி அதன்மூலம் தங்களது திறமையை வெளிக்காட்டுவதுடன் வருவாயும் ஈட்டி வருகின்றனர். தெரிந்தவர்கள் மற்றும் தெரியாதவர்களை பிராங்க் செய்து அந்த வீடியோக்களை யூ டியூப்களில் அப்லோட் செய்து அதன் மூலமும் பலரும் பிரபலமாகி வருகின்றனர். அவ்வாறு பிராங்க் வீடியோக்களை வெளியிடுபவர்களில் ஒருவர் சூர்யா. இவர் பிராங்க் பாஸ் என்ற பெயரில் யூ டியூப் தொலைக்காட்சி ஒன்று வைத்துள்ளார். அதில் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி அனுசுயா. இவர்களது ஒரே மகள் தனரக்ஷனா. தனரக்ஷனா திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் விஸ்காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். விஸ்காம் மாணவியான அவருக்கு ஒளிப்பதிவு மேல் ஆர்வம் இருந்துள்ளது. இதனால், பிராங்க் வீடியோக்களை வெளியிடும் யூ டிபர்கள் தங்களது வீடியோக்களுக்கு எவ்வாறு கேமராக்களை கையாள்கின்றனர் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
உங்களுக்குத் தற்கொலை எண்ணம் தோன்றுகிறதா? பதற்றம் வேண்டாம். உடனடியாக உதவி எண் 9152987821-க்கு அழைக்கவும். உங்கள் உயிரின் மதிப்பு அதிகம்
அப்போதுதான் தனரக்ஷனாவிற்கும், சென்னையைச் சேர்ந்த யூ ட்யூபர் சூர்யாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் ஒளிப்பதிவு தொடர்பாக பேசி வந்த இருவரும் பின்னர் நண்பர்கள் போல நெருக்கமாக பழகி வந்துள்ளனர். செல்போன் மூலமாக தொடர்ந்து வந்த அவர்களது நட்பு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அப்போதுதான் சூர்யா தனரக்ஷனா மட்டுமின்றி பல பெண்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், பல பெண்களுடனும் தனரக்ஷனாவை காதலிப்பதாக கூறியதுபோல காதலிப்பதாக கூறி பழகிவந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தை அறிந்த தனரக்ஷனா கடந்த 5-ஆம் தேதி சென்னையில் சூர்யாவை நேரில் சந்தித்துள்ளார். அப்போது, இதுதொடர்பாகவும் சூர்யாவிடம் கேட்டுள்ளார். ஆனால், சூர்யா முறையாக பதிலளிக்காமலும், தனரக்ஷனாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், தனரக்ஷனாவை சென்னையில் இருந்து திருச்சிக்கு திருப்பி அனுப்பியுள்ளார். ஊர் திரும்பிய தனரக்ஷனா சூர்யாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். ஆனால், சூர்யாவோ தனரக்ஷனாவின் அழைப்பை ஏற்காமல் தொடர்ந்து அலட்சியப்படுத்தி உள்ளார். இதனால், அவர் கடுமையான மன உளைச்சல் அடைந்தார்.
சூர்யா பேசாததால் விரக்தியடைந்த தனரக்ஷனா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது கை நரம்புகளை பிளேடால் அறுத்துக்கொண்டார். கை நரம்புகளை அறுத்துக்கொண்ட தனரக்ஷனா, தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, தகவலறிந்த நவல்பட்டு போலீசார் தனரக்ஷனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், உடனடியாக விசாரணையிலும் இறங்கினர்.
இதுதொடர்பாக, காவல்துறையில் தனரக்ஷனாவின் பெற்றோர்கள் யூ ட்யூபர் சூர்யாவும், அவரது தாயும் தனரக்ஷனாவை அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்று தாக்கியதாகவும், அதன் காரணமாகவே மன உளைச்சலில் தனரக்ஷனா தற்கொலை செய்து கொண்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர். தற்போது, யூ டிபர் பிராங்க் பாஸ் சூர்யாவை நவல்பட்டு போலீசார் விசாரணைக்காக தேடி வருகின்றனர். யூ ட்யூபருடன் கொண்ட காதலால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உங்களுக்குத் தற்கொலை எண்ணம் தோன்றுகிறதா? பதற்றம் வேண்டாம். உடனடியாக உதவி எண் 9152987821-க்கு அழைக்கவும். உங்கள் உயிரின் மதிப்பு அதிகம்.