Crime: எரிந்து கொண்டிருந்த சடலம்.. ஆடுமேய்பவர் கொடுத்த தகவல்..மனைவியை கொலை செய்து எரித்த ஐடி ஊழியர்!
கொலை செய்து சரண் அடைந்த முரளி கிருஷ்ணாவிடம், தீவட்டிப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகிலுள்ள ஜோடுகுளி பகுதியைச் சேர்ந்தவர்கள் நேற்று மாலை ஆடுகளை மேய்ப்பதற்காக, வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள புலிகுத்தி முனியப்பன் கோயில் அருகே, ஒரு இளம் பெண் சடலம் கிடப்பதை பார்த்து, தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், தீவட்டிப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சடலத்தை மீட்ட காவல்துறையினர் சொல்லலாமா இருந்த பெண் யார் என்று விசாரணை நடத்தினர். முகம், அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக சிதைக்கப்பட்டு இருந்தது.
மேலும், அவரது உடல் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது. அடையாளம் தெரியாத பெண்ணின் சரணத்தை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சடலத்தின் அருகே, பெண்ணின் உடைகள், செருப்பு மற்றும் தாலிக் கொடி ஆகியவை கிடந்தன. இதனால், அந்த பெண் திருமணமானவர் என்பது உறுதியானது. இது குறித்து ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா நேரில் விசாரணை நடத்தினார். சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்தனர்.
இந்நிலையில், தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியை சேர்ந்த முரளி கிருஷ்ணா (24) என்பவர், நேற்று இரவு சரண் அடைந்தார். பெங்களூருவில் ஐடி கம்பெனியில் வேலை செய்து வரும் இவர், சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த கோகில வாணி (20) என்பவரை காதலித்துள்ளார். கோகில வாணி சேலம் மாவட்டம் அரியானூர் அருகேயுள்ள தனியார் கல்லூரியில், பி.டெக் பாரா மெடிக்கல் 4வது ஆண்டு படித்து வந்தார். பெற்றோருக்கு தெரியாமல், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். நேற்று கோகில வாணியை பார்ப்பதற்காக, முரளி கிருஷ்ணா பெங்களூருவில் இருந்து சேலம் வந்துள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், கோகில வாணியை கொலை செய்து எரித்தது தெரியவந்துள்ளது. பின்னர், பெங்களூருவுக்கு சென்ற முரளி கிருஷ்ணா, நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக மகனை தீவெட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து சரணடைய வைத்துள்ளார்.
காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை, கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்றும், இந்த கொலைக்கு வேறு யாராவது உடந்தையாக இருந்தார்களா? என்பது குறித்தும் சரண் அடைந்த முரளி கிருஷ்ணாவிடம், தீவட்டிப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் பெண் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.