'அரசு மருத்துவமனை தடுப்பூசிகளை வீட்டில் பதுக்கி திருட்டா?’ பணியிடை நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்..!
வீட்டில் சோதனையிட்டபோது 100 நபர்களுக்கு செலுத்தும் வகையில் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே மருந்துகளை கைப்பற்றி தனலட்சுமி பற்றிய விசாரணையை மேலும் தொடங்கினார்.
கரூர் நகராட்சிக்குட்பட்ட கஸ்தூரிபாய் தாய் சேய் நல விடுதியில் செவிலியராக பணிபுரிந்து வருபவர் தனலட்சுமி .இவர் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள அய்யனார் நகரைச் சேர்ந்தவர். இந்நிலையில் தற்போது பொதுமக்களுக்கு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க தடுப்பூசிகள் போட்டு வருவதால் தடுப்பூசிக்கு கரூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் வாரத்திற்கு நான்கு நாட்கள் வீதம் தடுப்பூசிகள் போட்டு வருகின்றனர். மாவட்ட மக்களின் நலன் கருதி பத்துக்கு மேற்பட்ட தடுப்பூசி சிறப்பு முகாம் மூலம் நாள்தோறும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை போட்டுவரும் நிலையில் கூட போதுமான தடுப்பூசி இல்லாமல் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கரூர் நகராட்சி கஸ்தூரிபாய் தாய் சேய் நல விடுதி செவிலியர் தனலட்சுமி அவரது பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பணம் வாங்கிக்கொண்டு தடுப்பு ஊசி போட்டுள்ளார். இந்நிலையில் நேற்று கர்ப்பிணி பெண் ஒருவருக்கு செவிலியர் தனலட்சுமி அலைபேசி மூலம் அழைத்து தடுப்பூசி வந்துள்ளது, வந்து போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து கர்ப்பிணிப் பெண் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலைபேசி மூலம் தற்போது இந்த தடுப்பூசி இல்லை என்று கூறிய நிலையில், எனது வீட்டில் அருகாமையில் உள்ள செவிலியர் தடுப்பூசி வந்துள்ளதாக தெரிவித்து கால் செய்து உள்ளார். எனவும் அங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் இடம் தெரிவித்துள்ளார். உடனே, மருத்துவர் அந்த செவிலியர் பற்றி விசாரணையை தொடங்கினார். பின்னர் வேடசந்தூர் வட்டார மருத்துவர் மகேஸ்வரிக்கு இந்த தகவலை அளித்துள்ளனர். உடனே தனலட்சுமி இல்லம் உள்ள அய்யனார் தெரு பகுதிக்கு சென்றனர்.
அப்பொழுது அங்கு வீட்டிலிருந்த செவிலியர் தனலட்சுமியிடம் வேடசந்தூர் வட்டார மருத்துவர் மகேஸ்வரி விசாரணை நடத்தியபோது முன்னுக்குப் பின்னான தகவலை அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த வட்டார மருத்துவர் அவர் வீட்டில் சோதனையிட்டபோது 100 நபர்களுக்கு செலுத்தும் வகையில் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே மருந்துகளை கைப்பற்றி தனலட்சுமி பற்றிய விசாரணையை மேலும் தொடங்கினார்.
சம்பவத்தின் நடவடிக்கைகளை கரூர் நகராட்சிக்குட்பட்ட ஆணையர் மற்றும் கஸ்தூரிபாய் தாய் சேய் நல விடுதி தலைமை மருத்துவருக்கு தகவல் அளித்தனர். தகவலை பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, தனலட்சுமியை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார். பின்னர், போலீசாருக்கு புகார் தரப்பட்டு குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் இருந்து தடுப்பூசி வெளியே சென்றது குறித்தும், அவர் நடவடிக்கை குறித்தும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மருத்துவருக்கு நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி உத்தர விட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு செவிலியர் ஒருவர் பொதுமக்களுக்கு பயன்படுத்தும் தடுப்பூசியை வீட்டிற்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யும் வகையில் பொதுமக்களுக்கு போடப்பட்ட விவகாரம் கரூர் ,திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிர் காக்கும் பணியில் உள்ள செவிலியர்கள் சிலர் இதுபோல் செய்யும் குற்றச் செயல்களால் சிறப்பாக பணியாற்றும் மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்திவிடுகின்றனர்.