வேலை பார்த்த பங்கில் பெட்ரோல் வாங்கி தீ குளித்த முன்னாள் ஊழியர்
முன்னாள் ஊழியர் ஒருவர் தான் முன்பு பணியாற்றிய பெட்ரோல் பங்க் வந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி தீக்குளித்ததில் உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற காசாளரும் படுகாயம் அடைந்தனர்.
சிவகாசியில் இருந்து திருத்தங்கல் செல்லும் சாலையில் சுதர்சன் என்பவருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் திருத்தங்கலை சேர்ந்த கண்ணன்(34) என்பவர் ஊழியராக பணி புரிந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் வேலையிலிருந்து நின்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கண்ணன், முன்பு தான் வேலைபார்த்த பெட்ரோல் பங்கிற்கு வந்து ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கியுள்ளார். பின்னர் பெட்ரோல் விற்பனை நிலையத்தின் பின்பக்கமாக உள்ள கழிப்பறைக்கு சென்று தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு பெட்ரோல் பங்கில் பணிபுரிந்த பெண் தொழிலாளர்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர்அதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக காசாளர் வினோத்குமார்(25) தீக்குளித்த கண்ணனை காப்பாற்ற முயற்சி எடுத்ததாக தெரிகிறது. அதில் இருவரும் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்த முன்னாள் ஊழியர் கண்ணன், காசாளர் வினோத்குமார் ஆகிய இருவரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமாக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக கண்ணன் தீ வைத்துக் கொண்டதாக முதல்கட்ட தகவல் தெரிந்த போதிலும் அவர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பின்பக்கம் கழிப்பறைக்கு சென்று தீ வைத்துக் கொண்டதால் பெட்ரோல் பங்கில் எந்த விதமான அசம்பாவிதமும் இல்லாமல் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த கண்ணன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.