மூதாட்டியின் மூஞ்சியில் மிளகாய் பொடி தூவி தங்க நகை கொள்ளை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்!
ஜோலார்பேட்டை அருகே மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடி தூவியும் கட்டையால் தாக்கியும் 4 சவரன் தங்க நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜோலார்பேட்டை அருகே மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடி தூவியும் கட்டையால் தாக்கியும் 4 சவரன் தங்க நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். வயது 70. இவருடைய மனைவி கனகா. வயது 65. இவர்கள் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர்.
இவர்களுடைய மகன் ஆறுமுகம் இவர்களது வீட்டின் அருகேயே தனியாக வீடு கட்டி குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் வயது முதிர்ந்த தம்பதியினர் தனியாக வசித்து வருவதை அறிந்த மர்ம நபர்கள் அங்கு கொள்ளையடிக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, நேற்று இரவு முதிய தம்பதியின் வீட்டின் கதவை அந்த மர்ம நபர்கள் தட்டியுள்ளனர்.
அப்போது வெளியே வந்த மூதாட்டி கனகாவின் முகத்தில் மிளகாய் பொடி தூவி துணியால் முகத்தை மூடி கட்டையால் சாரமாரியாக அடித்துள்ளனர்.
இதனால் கனகா கத்தி கூச்சலிடிவே கழுத்தில் இருந்த நான்கு சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து மர்ம நபர் தப்பி ஓடியுள்ளனர்.
இதனை அறிந்த அவருடைய மகன் ஆறுமுகம் ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியாக வசித்து வரும் மூதாட்டியிடம் மிளகாய் பொடி தூவி நான்கு சவரன் தங்க நகை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் திருப்பத்தூரில் தனியாக வசித்து வரும் முதியவர்களிடம் மர்ம நபர்கள் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுவது தொடர் கதையாக உள்ளதாக அப்பகுதிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





















