கோவை : போதை மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் ஏற்றும் கொடூரம்: இளைஞர்களே குறி ! 4 பேர் கைது!
மாத்திரைகளை கரைத்து ஊசியின் மூலம் உடம்பில் செலுத்தி போதையை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பதும், கல்லூரி மாணவர்களையும், இளைஞர்களையும் குறி வைத்து விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.
கோவையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்பனை செய்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் காரணமாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. அண்மையில் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட கொரோனா தொற்று பரவல் அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்த, பிற மாவட்டங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. இந்த மாவட்டங்களில் உள்ள பலர் போதைக்காக மாற்று வழிகளை தேடி வருகின்றனர். அதேபோல இளைஞர்களையும், கல்லூரி மாணவர்களையும் குறி வைத்து புதிய புதிய வகைகளில் போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி வருவதும் நடந்துவருகிறது. இந்நிலையில் மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் உடலில் ஏற்றி போதை ஏற்றும் முறையை சிலர் பின்பற்றி வருவது தெரியவந்துள்ளது.
இதனிடையே கோவை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வுகளை பயன்படுத்தி மாநகர பகுதிகளுக்குள் சமூக விரோதிகள் சட்ட விரோத செயல்களை ஈடுபடுவதை தடுக்க, காவல் துறையினர் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சாய்பாபா காலனி காவல் துறையினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது கோவில் மேடு தவசி நகர்ப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சாலையோரம் ஒரு கார் நின்று கொண்டிருப்பதை பார்த்துள்ளனர். இதையடுத்து ரோந்து சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அச்சோதனையில் வலி நிவாரணத்திற்காக உட்கொள்ளக் கூடிய மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. மேலும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி அதிக அளவில் மாத்திரைகளை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து 4 பேரையும் காவல் துறையினர் சாய்பாபா காலனி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் Tydol tapentadol 100mg மாத்திரைகளை கரைத்து ஊசியின் மூலம் உடம்பில் செலுத்தி போதையை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பதும், கல்லூரி மாணவர்களையும், இளைஞர்களையும் குறி வைத்து விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ஜானகி ராமன், டிவிஎஸ் நகரை சேர்ந்த பார்த்திபன், இடையர்பாளையத்தை சேர்ந்த கபிலேஷ், குனியமுத்தூரை சேர்ந்த முகமது அப்சல் ஆகிய 4 பேரையும் சாய்பாபா காலணி காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 650 மாத்திரைகள், 11,500 ரூபாய் ரொக்கம் மற்றும் போதை மாத்திரை விற்பனைக்கு பயன்படுத்திய காரை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து சட்டவிரோதமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது போன்ற மாத்திரைகளை உட்கொள்வதும், ஊசி மூலம் உடலில் ஏற்றுவதும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.