கோவையில் இரிடியம் தருவதாக கூறி செங்கல்லை கொடுத்து 30 லட்சம் மோசடி
மனோகரனை தொடர்பு கொண்ட முருகானந்தம், தன்னிடம் சக்தி வாய்ந்த அரிதான இரிடியம் இருப்பதாகவும், 30 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் இரிடியத்தை தந்து விடுவதாகவும் கூறியுள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த கந்தராஜ் என்பவரது மகன் மனோகரன். 60 வயதான இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இதனிடையே மனோகரனுக்கும் கோவையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மனோகரனை தொடர்பு கொண்ட முருகானந்தம், தன்னிடம் சக்தி வாய்ந்த அரிதான இரிடியம் இருப்பதாகவும், 30 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் இரிடியத்தை தந்து விடுவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பி 30 லட்ச ரூபாய் பணத்துடன் நேற்று முன் தினம் மனோகரன் கோவைக்கு வந்துள்ளார்.
பின்னர் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் மனோகரன் அறை எடுத்து தங்கியுள்ளார். மேலும் 30 இலட்ச ரூபாய் பணத்துடன் வந்ததாகவும், இரிடியத்தை கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறும் முருகானந்திற்கு மனோகரன் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து நேற்று மனோகரன் அறைக்கு வந்த இருவர், தங்களை முருகானந்தம் மற்றும் கண்ணப்பன் அனுப்பி வைத்ததாக பெட்டியை கொடுத்து விட்டு நான்கு மணி நேரம் கழித்து பெட்டியை திறக்குமாறு கூறியுள்ளார். இதனை நம்பி 30 லட்ச ரூபாய் பணத்தை மனோகரன் அவர்களிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்டு பெட்டியை கொடுத்து விட்டு இருவரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
பெட்டியை பெற்றுக் கொண்ட மனோகரன் சிறிது நேரம் கழித்து பெட்டியை திறந்து பார்த்துள்ளார். அப்போது அப்பெட்டியில் செங்கல் இருப்பதை பார்த்து மனோகரன் அதிர்ச்சி அடைந்தார். இரிடியம் எனக்கூறி பெட்டிக்குள் செங்கலை கொடுத்து மோசடி செய்யப்பட்டு இருப்பதை மனோகரன் உணர்ந்தார். இது தொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் மனோகரன் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் இந்த மோசடி குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் முருகானந்தம், கண்ணப்பன் உள்ளிட்ட 4 பேரை வலை வீசி தேடி வருகின்றனர். இரிடியம் என செங்கலை கொடுத்து மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரிடியம் மோசடிப் புகார்கள் தொடர்ந்து நடந்து வந்தாலும், தொடர்ந்து நம்பி பணம் கொடுத்து ஏமாறுபவர்கள் இருந்து கொண்டே இருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்