Crime: பொண்ணு மேல கைவச்சா விட்ருவோமா? 3 மாநிலங்கள், 700 சிசிடிவி கேமராக்கள் - இளைஞருக்கு நேர்ந்த கதி
Bengaluru Crime: பெங்களூருவில் இளம் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Bengaluru Crime: பாலியல் புகாரில் சிக்கிய இளைஞரை 700 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றம் என்ன?
கடந்த வாரம் பெங்களூருவில் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞரை தேடும் மாரத்தான் பணிகள் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளன. 700 சிசிடிவிகளில் இருந்து காட்சிகளை ஸ்கேன் செய்து, கேரளாவின் ஒரு தொலைதூர கிராமத்தில் பதுங்கியிருந்த குற்றம்சாட்டப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூருவில் உள்ள BTM லேஅவுட்டில் உள்ள ஒரு குறுகிய சாலையில் நடந்து சென்ற இரண்டு இளம்பெண்களை ஒரு நபர் பின் தொடர்ந்தார். அவரை தவிர்த்துக்கொண்டு பெண்கள் வேகமாக அங்கிருந்து செல்ல முயன்றனர். அப்போதும், ஒரு பெண்ணை பிடித்து இழுத்து தகாத முறையில் நடந்துகொண்ட இளைஞரை, மற்றொரு பெண் தடுக்க முயன்றார். தொடர்ந்து அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மூன்று மாநிலங்களில் தேடுதல் வேட்டை
வைரலான வீடியோவின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடும் பணியை முடுக்கிவிட்டனர். ஒருவார கால தேடுதல் பணிக்கு பிறகு போலீசார் குற்றம்சாட்டப்பட்ட நபரை கைது செய்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, குற்றம் சாட்டப்பட்ட சந்தோஷ், 26 வயதுடையவர், பெங்களூருவில் உள்ள ஒரு ஜாகுவார் ஷோரூமில் ஓட்டுநராக பணிபுரிகிறார். தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டபோது அவர் பெங்களூருவிலிருந்து தமிழ்நாட்டின் ஓசூருக்கு தப்பிச் சென்றுள்ளார். பின்னர் அவர் சேலத்திற்கும் அங்கிருந்து கோழிக்கோடுக்கும் தப்பிச் சென்றார். கேரளாவின் ஒரு தொலைதூர கிராமத்தில் போலீசார் அவரைப் பிடிக்க முடிந்தது, கிட்டத்தட்ட ஒரு வாரம் நீடித்த வேட்டை மூன்று மாநிலங்களை உள்ளடக்கியது.
700 சிசிடிவி கேமராக்கள்
சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சியில் இருந்த நபர், அடுத்தடுத்து எங்கெங்கு நகர்ந்தார் என்பதை தொடர்ந்து அந்த பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு செய்து போலீசார் குற்றம்சாட்டப்பட்ட நபரை பின் தொடர்ந்துள்ளனர். அந்த வகையில் 700 சிசிடிவி கேமராக்காளில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், அந்த நபர் பெங்களூருவிலிருந்து தமிழ்நாடு, அங்கிருந்து கேராளாவிற்கு தப்பிச் சென்றது கண்டறியப்பட்டுள்ளது.
வழக்கு விவரம்:
தாக்குதல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் பின்தொடர்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது நண்பரையும் அவர்கள் கண்டுபிடித்தனர். ஆனால் அவர்கள் போலீசாரிடம் தனியுரிமை கேட்டு விசாரணையில் பங்கேற்க விரும்பவில்லை என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண போலீசார் முயன்றபோது, சிசிடிவி காட்சிகளின் மோசமான தரம் ஒரு சவாலாக அமைந்தது. இருப்பினும் தொழில்நுர்பத்தின் உதவி மற்றும் நாட்டிலேயே அதிகம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட நகரங்களில் பெங்களூருவும் ஒன்று என்பதால், குற்றம்சாட்டப்பட்ட நபர் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.





















