Crime: காதலர்கள் முன்பு விடிய விடிய 2 இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை - திண்டுக்கலில் அதிர்ச்சி சம்பவம்
திண்டுக்கல் மாவட்டம் இடையக்கோட்டையில் கடந்த மார்ச் 30 ஆம் தேதி கோவில் ஒன்றில் திருவிழா நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் தங்கள் காதலர்களுடன் சென்றுள்ளனர்.
திண்டுக்கலில் கோவில் திருவிழா பார்க்கச் சென்ற இளம் பெண்கள், அவர்கள் காதலர்கள் முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் இடையக்கோட்டையில் கடந்த மார்ச் 30 ஆம் தேதி கோவில் ஒன்றில் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவுக்கு அப்பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் தங்கள் காதலர்களுடன் சென்றுள்ளனர். இவர்களில் 19 வயதான மூத்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் வேறொரு வாலிபருடன் காதல் ஏற்பட்டுள்ளது. 17 வயதான தங்கையும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இப்படியான 4 பேரும் சம்பந்தப்பட்ட கோயில் திருவிழாவுக்கு சென்று விட்டு நள்ளிரவு 1 மணிக்கு திண்டுக்கல் திரும்பியுள்ளனர். அப்போது தங்கள் ஊருக்கு செல்லும் பஸ்ஸூக்காக திண்டுக்கல் மின்வாரிய தலைமை அலுவலகம் அருகே பழனி பைபாஸ் சாலையில் காத்திருந்துள்ளனர். அந்த சமயம் அந்த பக்கமாக பைக்குகளில் 3 இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்கள் இளம்பெண்கள் இரவு நேரத்தில் 2 இளைஞர்களுடன் தனியாக நிற்பதை பார்த்து விசாரித்துள்ளனர். நீங்கள் யார்? எதற்காக இந்த நேரத்தில் இங்கு நிற்கிறீர்கள்? என கேட்டுள்ளனர்.
அதற்கு பெண்களுடன் இருந்த இளைஞர்கள், “நாங்கள் காதலர்கள். ஊருக்கு செல்ல பஸ்ஸுக்காக காத்திருக்கிறோம்” என பதில் சொல்லியுள்ளனர். இதனைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த பைக் இளைஞர்கள் திடீரென கத்தியை காட்டி 4 பேரையும் மிரட்டியுள்ளனர். அவர்களை தங்கள் பைக்குகளில் ஏறும்படி சொல்லியுள்ளனர். ஊருக்கு பயந்த 4 பேரும் அவர்களுடன் சென்றுள்ளனர். பைக் இளைஞர்கள் திண்டுக்கல் அருகே தாமரைக்குளத்தில் உள்ள மைலாப்பூர் என்ற குளக்கரைக்கு கூட்டிச் சென்றுள்ளனர்.
அங்கு முன்கூட்டியே கிடைத்த தகவலின்படி இன்னொரு இளைஞரும் வந்துள்ளார். இந்த 4 பேரும் பெண்களுடன் வந்த காதலர்கள் 2 பேரை கட்டிப்போட்டனர். பின்னர் சகோதரிகள் இருவரையும் ஒருவர் பின் ஒருவராக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தங்கள் கண்முன் காதலி பாலியல் வன்கொடுமை செய்வதை தடுக்க முடியாமல் இரு இளைஞர்களும் கதறியுள்ளனர். பின்னர் விடியற்காலையில் பைக்கில் வந்த 4 இளைஞர்கள் தப்பியோடி விட்டனர்.
இரு பெண்களும் கட்டிப்போடப்பட்டிருந்த தங்கள் காதலர்களை மீட்டதோடு மட்டுமல்லாமல் நேராக சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அப்பெண்கள் கூறிய அடையாளத்தைக் கொண்டு வழக்குப்பதிவு செய்த போலீசார் சரண்குமார், வினோத் குமார், சூர்ய பிரகாஷ், சுள்ளான் என்ற பிரசன்னா குமார் ஆகிய 4 பேர் தான் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர். இதில் பிரசன்னா குமார் தலைமறைவாகி விட்ட நிலையில் அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இளம் பெண்கள் அவர்கள் காதலர்கள் முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்படுத்தியுள்ளது.