ரஷ்யாவில் இருந்து வந்த சரக்கு கப்பல்.. கடத்தப்பட்ட 130 டன் பொட்டாசியம் உரங்கள் - போலீசில் சிக்கியது எப்படி?
உரங்கள் தரையில் கொட்டப்பட்டு 50 கிலோ வீதம் சாக்கு மூடையாக மாற்றி, பிரபல உர கம்பெனிகளின் பெயரில் போலியாக சாக்கு மூடைகளில் அடைத்து நெல்லை மாவட்டம் களக்காடு பகுதிக்கு கடத்த முயன்றது தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முள்ளக்காடு அருகே உள்ள தனியார் உப்பு குடோனில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த சுமார் 130 டன் பொட்டாசியம், லாரி, எடை மிஷன், பேக்கிங் இயந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
130 டன் பொட்டாசியம்:
தூத்துக்குடி மாவட்டம், முள்ளகாடு அருகே உள்ள தனியார் உப்பு குடோனில் சட்ட விரோதமாக பொட்டாசியம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக முத்தையாபுரம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் முத்தையாபுரம் உதவி ஆய்வாளர் சுந்தர், தலைமை காவலர் அருணாச்சலம், முத்தையாபுரம் தனிப்பிரிவு காவலர் ஜான்சன், தெர்மல் நகர் தனிப்பிரிவு காவலர் செல்வின் ராஜ், ஆகியோர் நேரில் சென்று பார்த்த போது உப்பு குடோனில் சட்டவிரோதமாக பொட்டாசியம் பதுக்கி வைக்கப்பட்டு கடத்த இருப்பது தெரியவந்தது. உடனடி மேற்படி போலீசார் கடத்தல் நடைபெற்று கொண்டிருந்த குடோனை சுற்றி வளைத்து கடத்தலுக்கு பயன்படுத்த பட்ட லாரி, எடை மிஷன், மற்றும் சுமார் 130 டன் பொட்டாசியம் ஆகியவற்றை கைப்பற்றினர். இந்த பொட்டாசியத்தின் மதிப்பு சுமார் ₹ 90 லட்சம் என கூறப்படுகிறது.
130 டன் பொட்டாசியம்:
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ரஷ்யாவில் இருந்து 33 ஆயிரம் டன் பொட்டாஸ் உரம் ஏற்றிய சரக்கு கப்பல், தூத்துக்குடி துறைமுகத்திற்கு நேற்று வந்து சேர்ந்தது. பின்னர் துறைமுகத்தில் இருந்து லாரிகள் மூலம் தூத்துக்குடி பகுதியில் உள்ள குடோன்களுக்கு பொட்டாஸ் உரம் பிரித்து அனுப்பும் பணி நடந்தது. அப்போது சுமார் 130 டன் பொட்டாஸ் உரம் ஏற்றிய 3 லாரிகள், சம்பந்தப்பட்ட குடோன்களுக்கு செல்லாமல் மாயமானது தெரிய வந்தது. இந்நிலையில் மூன்று லாரிகள் மட்டும் சட்டவிரோதமாக முள்ளக்காடு அருகே உள்ள உப்பு குடோனிற்கு கடத்தி வரப்பட்டுள்ளது.
லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்ட உரங்கள் தரையில் கொட்டப்பட்டு 50 கிலோ வீதம் சாக்கு மூடையாக மாற்றி, பிரபல உர கம்பெனிகளின் பெயரில் போலியாக சாக்கு மூடைகளில் அடைத்து நெல்லை மாவட்டம் களக்காடு பகுதிக்கு கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. பொட்டாஸ் உரங்களை, கடத்தலுக்காக அப்பகுதி உப்பள தொழிலாளர்களை பயன்படுத்தியதும் அவர்களுக்கு சம்பளம் இருமடங்கு வழங்கி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து உப்பு குடோன் அருகே கடத்தலுக்கு பதுக்கி வைத்திருந்த சுமார் 130 டன் பொட்டாஸ் உரங்கள் மற்றும் பேக்கிங் இயந்திரங்கள், லாரி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது.
பெரும் பரபரப்பு
மேலும், இதுதொடர்பாக கடத்திலில் ஈடுபட்ட முத்தையாபுரம் அய்யங்கோவில் தெரு பகுதியை சேர்ந்த தவசி முத்து என்பவரது மகன் மாதவன் (35), பாலபாண்டி நகர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் மதியழகன் (55), வல்லநாடு பகுதியை சேர்ந்த அருணாசலம் மகன் கொம்பையா (35) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முக்கிய கடத்தல் குற்றவாளியான தூத்துக்குடியை சேர்ந்த முத்து என்பவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
உரங்கள் கொண்டுவரப்பட்ட ஒரே நாளில் 130 டன் உரம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது மேலும் இந்த உரக்கடத்தல் செய்யப்பட்ட குடோனை வேளாண்மை துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.