கணவன்களுக்கு கல்தா! காதலர்களுடன் எஸ்கேப்! பிரதமரின் வீடு கட்டும் நிதியில் 11 பெண்கள் செய்த காரியம்
உத்தரபிரதேசத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் நிதியை எடுத்துக்கொண்டு கணவன்களை கைவிட்டு காதலர்களுடன் 11 பெண்கள் வீட்டை விட்டு ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசு ஏராளமான நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் திட்டங்களில் மிகவும் முக்கியமான திட்டம் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம். ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் கீழே உள்ள குடும்பங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு லட்சக்கணக்கான குடும்பங்கள் நாடு தோறும் பயன் அடைந்து வருகின்றனர்.
பிரதமரின் வீடு கட்டும் நிதி:
உத்தரபிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது மகாராஜாகஞ்ச் மாவட்டம். மகாராஜாகஞ்ச் மாவட்டத்தில் நடப்பாண்டு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2 ஆயிரத்து 350 பயனாளர்கள் முதற்கட்ட நிதியை பெற்றுள்ளனர். இந்த நிலையில், இந்த நிதியின்கீழ் நிதி பெற்றவர்கள் வீடு கட்டும் பணி குறித்து ஆய்வு செய்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
கணவன்களுக்கு கல்தா கொடுத்த 11 மனைவிகள்:
மகாராஜாகஞ்ச் மாவட்டத்தில் பிரதமரின் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு முதற்கட்டமாக ரூபாய் 40 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் கீழ் நிதியானது குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படுவது வழக்கம். அந்த மாவட்டத்தில் அந்த நிதியை பெற்ற 11 பெண்கள் தங்களது கணவன்மார்களை கைவிட்டுவிட்டு, காதலர்களுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூபாய் 40 ஆயிரம் நிதியைப் பெற்ற இவர்கள் உடனே, தங்கள் காதலர்களுடன் ஊரை விட்டு ஓடி தலைமறைவாகிவிட்டனர்.
வீடு கட்டும் பணி குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் சென்றபோது, இந்த 11 பெண்கள் தரப்பில் வீடு கட்டுவதற்கான எந்த பணியும் தொடங்கப்படாமல் இருந்தபோதுதான் அதிகாரிகளுக்கு இந்த உண்மை தெரிய வந்துள்ளது. மகாராஜாகஞ்ச் மாவட்டத்தில் உள்ள துதிபரி, சீத்லபுர், சட்தியா, ராம்நகர், பகுல்திகா, கஸ்ரா, கிசுன்புர்ல மேதௌலி ஆகிய கிராமங்களில் இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் நடப்பது இது முதன்முறை அல்ல. கடந்தாண்டும் இதேபோல, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூபாய் 50 ஆயிரம் முதற்கட்ட நிதியை பெற்றுக்கொண்ட நான்கு பெண்கள் இதேபோல, தங்கள் கணவனை கைவிட்டு விட்டு காதலர்களுடன் வீட்டைவிட்டு ஓடிய சம்பவம் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Earthquake: ஷாக்! இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.4!
மேலும் படிக்க: Accident: காலையிலே சோகம்! பேருந்தும், லாரியும் மோதியதில் 18 பேர் மரணம் - வேதனையில் ஆக்ரா