World Bank: வெளிநாடுகளில் பணிபுரியும் இடம்பெயர்ந்த இந்தியர்கள், அனுப்பிய தொகை இத்தனை லட்சம் கோடி ரூபாயா?
சிங்கப்பூர் மற்றும் பிற வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டுக்கு இந்தியத் தொழிலாளர்கள் இந்த ஆண்டில் மட்டும் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை அனுப்பியுள்ளனர்.
சிங்கப்பூர் மற்றும் பிற வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டுக்கு இந்தியத் தொழிலாளர்கள் இந்த ஆண்டில் மட்டும் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை அனுப்பியுள்ளனர்.
இது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.8 லட்சம் கோடியாகும். இத்தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்த மதிப்பு 7.5 சதவீதமாக இருந்தது. மெக்சிகோவுக்கு (60 பில்லியன் அமெரிக்க டாலர்கள்), சீனாவுக்கு (51 பில்லியன் டாலர்கள்), பாகிஸ்தானுக்கு (29 பில்லியன் டாலர்கள்) வெளிநாடுகளிலிருந்து அந்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது.
பிராந்திய அளவில் பார்த்தால் தெற்காசியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்களால் அனுப்பப்படும் பணத்தின் அளவு 3.5 சதவீதம் இந்தாண்டில் அதிகரித்துள்ளது. எனினும், பல்வேறு நாடுகளிடையே ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது.
எத்தனை சதவீதம்
இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணத்தின் அளவு 12 சதவீதமும், நேபாளத்துக்கு அனுப்பப்படும் பணத்தின் அளவு 4 சதவீதமும் அதிகரித்துள்ளது. இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு இந்த வகையிலான பணவரத்து 10 சதவீதம் குறைந்துள்ளது.
கொரோனா காரணமாக சில நாடுகள் வெளிநாடுகளிலிருந்து பணவரத்தை பெருவதற்காக சில எளிமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலும் முறைசாரா தொழில்களில் வளைகுடா நாடுகளில் ஈடுபட்டிருப்பவர்களிடம் இருந்து தான் அதிக தொகை வந்தது. ஆனால், இந்த முறை அந்த நிலை மாறியிருக்கிறது.
பணம் அனுப்பி வைப்பது அதிகரிப்பு
அமெரிக்கா, இங்கிலாந்து, ஆசிய-பசிபிக் நாடுகளான சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திலிருந்தும் அதிக தொகை இந்தியாவில் உள்ள அவர்களின் குடும்பத்தினருக்கு அனுப்பப்படுகிறது.
2016-2017 முதல் 2020-2021 இடைப்பட்ட காலத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் தொகை 26 சதவீதத்திலிருந்து 36 சதவீதமாக அதிகரித்துள்ளது.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன், கத்தார் ஆகிய 5 வளைகுடா நாடுகளிலிருந்து அனுப்பி வைக்கப்படும் பணம், 54 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக குறைந்துள்ளது. 2020-2021 காலகட்டத்தில் 23 சதவீதத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தை அமெரிக்கா விஞ்சியது. 20 சதவீத இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் உள்ளனர்.
காரணம் என்ன?
அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, சுமார் 50 லட்சம் இந்தியர்கள் 2019இல் அந்நாட்டில் இருந்தனர்.
கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே வேலை செய்ததும் அதிக பணம் அனுப்பி வைக்கப்பட்டதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இரண்டாவதாக, வளைகுடா நாடுகளில் பொருளாதார நிலை தற்போது மோசமடைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் அந்த நாடுகளில் இருந்து இந்தியத் தொழிலாளர்கள் திரும்பிவிட்டனர்.
அத்துடன், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதள பாதாளத்திற்கு சென்றதும் பண வரத்துக்கு காரணமாக இருக்கலாம் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக நிகழாண்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் நாட்டில் உள்ள குடும்பத்தினர் பணம் அனுப்பியது 4.9 சதவீதம் உயர்ந்துள்ளது.
அடுத்த ஆண்டில் இந்த அளவு இன்னும் 2 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக வருவாய் கொண்ட நாடுகளில் உள்நாட்டு உற்பத்தி குறைந்து வருவதால் இந்த பணவரத்து அதிகரிக்கலாம்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், சர்வதேச கச்சா எண்ணெய் விலை, பணப்பரிமாற்ற விகிதம் ஆகியவையும்
வளர்ந்த நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
தெற்காசியாவைப் பொருத்தவரை, புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் பணம் 0.7 சதவீதம் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் சமூக பாதுகாப்பு மற்றும் வேலைக்கான இயக்குநர் மிச்சல் ருத்கோவ்ஸ்கி கூறுகையில், "கொரோனா காலத்தில் வகுக்கப்பட்ட ஒருங்கிணைந்த சமூக பாதுகாப்புக் கொள்கைகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக இருந்தது. இதனால், தாய்நாட்டில் இருக்கும் குடும்பத்தினருக்கு அவர்களால் தொடர்ந்து பணம் அனுப்பி வைக்க முடிந்தது. இத்தகைய கொள்கைகள் நிச்சயம் தொடரும்" என்றார்.