9 Carat Gold: பிரபலமாகும் 9 கேரட் நகைகள்; பாதுகாப்பானதா? சிறப்பான முதலீடா? முழு விவரம்!
9 Carat Gold Details in Tamil: நான் அணிந்து கொள்வதற்காக தங்க நகை வேண்டும் என்று நினைப்பவர்கள் 22 கேரட் தங்கத்தை மட்டுமே வாங்க வேண்டும் என்பதில்லை. சிறந்த மாற்றாக 9 கேரட் தங்கம் இருக்கிறது.

விண்ணைப் பிளக்கும் வகையில் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், 22 கேரட் தங்க நகைகளுடன் 9 கேரட் நகைகளும் அதிக அளவில் பிரபலமாகி வருகின்றன. இவை பாதுகாப்பானதா? சிறப்பான முதலீடா? யாரெல்லாம் வாங்கலாம்? இதோ பார்க்கலாம்.
நான் அணிந்து கொள்வதற்காக தங்க நகை வாங்குகிறேன். திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் 22 கேரட் தங்கத்தை மட்டுமே வாங்க வேண்டும் என்பதில்லை. அவர்களுக்கான சிறந்த மாற்றாக 9 கேரட் தங்கம் இருக்கிறது.
916 தங்கம்
24 கேரட் என்பது சுத்த தங்கம். இதில் எந்த தனிமங்களும் கலந்து இருக்காது. ஆனால் அதில் நம்மால் நகை செய்ய முடியாது என்பதால்தான் 22 கேரட் தங்கத்தில் நகை செய்யப்படுகிறது. அதில் 91.6% தங்கம் இருக்கும். அதனால்தான் நைன் ஒன் சிக்ஸ் என்று குறிப்பிடப்படுகிறது.
அடுத்ததாக 18 கேரட் தங்க நகை உள்ளது. இது பெரும்பாலும் வைரக்கற்களை பதிக்கக்கூடிய தங்க ஆபரணங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அடுத்ததாக 16 கேரட், 14 கேரட் தங்க நகைகளும் இருக்கின்றன. இப்போதெல்லாம் 9 கேரட் தங்க நகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் 37.5% அளவுக்கு தங்கம் உள்ளது.
பாதிக்கும் குறைவான அளவில்
மீத அளவுக்கு வெள்ளி, காப்பர், இரிடியம், துத்தநாகம் உள்ளிட்ட பிற தனிமங்கள் கலந்திருக்கின்றன. பாதிக்கும் குறைவான அளவில் தங்கத்தை இந்த 9 கேரட் தங்க நகைகள் கொண்டிருக்கின்றன.
’’தங்கத்தின் விலையும் ஏறிக்கொண்டே செல்கிறது, பாதுகாப்பு அச்சுறுத்தலும் ஏற்பட வாய்ப்புள்ளது’’ என்று நினைப்பவர்கள் 9 கேரட் தங்க நகைகளை வாங்கலாமா என்று யோசிக்கலாம். இது பார்க்க மிகவும் டிரெண்டியாக இருக்கும். தினசரி பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தங்க நகை உணர்வை கொடுக்கும் என்பதாகவும் நினைப்பவர்கள் இந்த நகையை வாங்கலாம்.
அதே நேரத்தில் பிற தனிமங்கள் கலந்திருப்பதால் இதன் உறுதித் தன்மையில் பிரச்சனை வரும் என்று நினைக்க வேண்டாம். நீண்ட காலத்துக்கு உழைக்கக்கூடிய வகையில் இந்த நகைகள் உருவாக்கப்பட்டு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில் பெரிய அளவில் கீறல்கள் உருவாகாது என்றே கூறப்படுகிறது.

இது யாருக்கெல்லாம் பொருந்தும்?
பேஷனுக்காக நான் அணிந்து கொள்வேன் என்று நினைப்பவர்களுக்கு இந்த நகை பொருந்தும். ஆனால் சேமிப்பு மிகுந்த முதலீடாகவோ இருக்காது. இதில் என்ன பிரச்சினை என்றால், 9 கேரட் தங்க நகைகளுக்கு ரீசேல் வேல்யூ மிகவும் குறைவு. அதேபோல 22 கேரட் தங்க நகைகளில் கிடைக்கக்கூடிய பளபளப்பு 9 கேரட் தங்க நகைகளில் கிடைக்காது. சற்றே பளபளப்பு குறைந்து து காணப்படும், தாமிரம் கலந்த மஞ்சள் நிறத்தில் இந்த நகைகள் இருக்கும்.
இந்த நகையை வைத்து வங்கியில் அல்லது பிற பகுதிகளில் அடமானம் வைத்து கடன் பெற முடியாது. 18 கேரட் நகைகளுக்கு கீழே இருந்தாலே எந்த நகைக் கடைகளும் கடன் கொடுக்காது. தினசரி அணிய நினைப்பவர்கள், தங்க நகைகளை நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ பரிசளிக்க நினைப்பவர்கள் மட்டும் இந்த நகையை ஒரு தேர்வாக வைத்துக் கொள்ளலாம்.
தங்கத்தின் விலை குறைவதற்கான வாய்ப்பில்லை
முதலீடு அடிப்படையில் தங்கத்தை வாங்க நினைப்பவர்கள், 24 கேரட் தங்கத்தை காயினாகவோ கட்டிகளாகவோ வாங்கி கொள்வது சிறப்பாக இருக்கும். தங்கம் விலை குறைந்த பிறகு வாங்கலாம் என்று காத்திருப்பவர்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ளுங்கள், இப்போதைக்கு தங்கத்தின் விலை குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை நிதர்சனம்.






















