UPI Payment: உலகிற்கே வழிகாட்டும் இந்தியாவின் யுபிஐ! பிரான்ஸிலும் வந்தாச்சு! வேறு எங்கெங்கு இருக்கு தெரியுமா?
இந்தியாவின் யுபிஐ சேவை உலகிற்கே முன் மாதிரியாக இருந்து வரும் நிலையில், பிரான்ஸ் நாட்டில் யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
UPI Payment: இந்தியாவின் யுபிஐ சேவை உலகிற்கே முன் மாதிரியாக இருந்து வரும் நிலையில், பிரான்ஸ் நாட்டில் யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
யுபிஐ சேவை:
மத்திய அரசு 2016ல் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியது. பல வங்கி கணக்குகளையும் ஒரே மொபைல் செயலி மூலம் எளிதாக கையாளக்கூடிய UPI (Unified Payments Interface) வசதியை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் பெரிய அளவில் வளர்ச்சி இல்லாத நிலையில், ஆண்ட்ராய்டு போன்கள் வந்துவிட்ட பிறகு UPI வசதி என்பது அசுர வளர்ச்சி அடைந்து விட்டது.
அதற்கேற்ப Gpay, Paytm, PhonePe போன்ற பல்வேறு செயலிகளும் நடைபாதை வியாபாரம் தொடங்கி பெரிய பெரிய வணிகம் வரை யுபிஐ பயன்பாட்டை அதிகரித்துள்ளது. பயனாளர்களின் வசதிகளை மேற்படுத்துவதற்காக யு.பி.ஐ தொழில்நுட்பத்தில் பல்வேறு மாற்றங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றிற்காக மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பிரான்ஸிலும் யுபிஐ சேவை:
டிஜிட்டல் பரிவர்த்தனையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் பயனாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை வழங்கவும் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. வெளிநாடுகளுக்கும் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான கட்டமைப்பையும் உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
ஏற்கனவே, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, ஹாங் காங், ஓமன், கத்தார், அமெரிக்கா, சவுதி, அரேபியா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான வாய்ப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ள நிலையில், தற்போது பிரான்ஸிலும் யுபிஐ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
UPI formally launched at the iconic Eiffel Tower at the huge Republic Day Reception. 🇮🇳➡️🇫🇷
— India in France (@IndiaembFrance) February 2, 2024
Implementing PM @narendramodi’s announcement & the vision of taking UPI global. pic.twitter.com/abl7IPJ0To
இந்தியர்கள் இனி ஈஃபிள் டவரை பார்க்க வேண்டுமென்றால், யுபிஐ மூலம் பணம் செலுத்தி ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம். பிரான்ஸில் யுபிஐ பரிவர்த்தனையை ஏற்கும் முதல் அமைப்பு ஈஃபில் டவர் நிர்வாகம் என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரான்ஸில் உள்ள இந்திய தூதரகம் அதன் எக்ஸ் தளத்தில், "யுபிஐ பயன்பாட்டை சர்வதே அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் இலக்கின்படி, குடியரசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு அன்று பாரீஸில் உள்ள ஈஃபிள் டவரில் யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விரைவில் பிரான்ஸின் அனைத்து சுற்றுலா தளங்களிலும் இது விரிவாக்கப்படும் என்று என்பிசிஐ தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
வருகின்ற 25-ஆம் தேதி திருப்பூர் வரும் பிரதமர் மோடி ; பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு