kalaignar Loan Scheme: முதலாளிகளே..! ரூ.20 லட்சம் வரை கடன், 7% மட்டுமே வட்டி - அரசின் கலைஞர் கடனுதவி திட்டம் பற்றி தெரியுமா?
kalaignar Loan Scheme: தமிழ்நாடு அரசின் கலைஞர் சிறப்பு கடனுதவி திட்டம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
kalaignar Loan Scheme: தமிழ்நாடு அரசின் கலைஞர் சிறப்பு கடனுதவி திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
கலைஞர் சிறப்பு கடனுதவி திட்டம்:
தமிழ்நாடு அரசு மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தொழில்துறையை ஊக்குவிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது. ஏற்கனவே உள்ள தொழில்களை விரிவாக்கவும், பட்டபடிப்பு முடித்து வேலையற்று இருக்கும் இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை பட்டதாரி இளைஞர்களை தொழில்முனைவோராக்குவதற்கு ஏற்ப பல கடனுதவி திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் சிறப்பு கடனுதவி திட்டம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
தாய்கோ வங்கி மூலம் கடனுதவி:
சிறு மற்றும் குறு நிறுவனங்கள் விரிவடைய உதவிடும் நோக்கில் தாய்கோ வங்கி மூலமாக, கலைஞர் சிறப்பு கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்கள் என்பது ரூ.25 லட்சத்திற்கு மிகாத அளவில் இயந்திரங்களை நிறுவி, உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் ஆகும். அதன்படி, மேற்குறிப்பிடப்பட்ட நிறுவனங்களுக்கு,ரூ.20 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) 7 சதவீத வட்டி விகிதத்தில் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கி, முதலீட்டாளர்கள் தங்களது நிறுவனங்களை விரிவுபடுத்த உதவுகிறது. நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்திற்கு ரூ.100 கோடி வரை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் தொழில்துறை விரிவடைந்து, வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
கூடுதல் வசதி:
இரண்டு ஆண்டுகளாக லாபத்தில் இயங்கும் நிறுவனங்கள், ஏற்கனவே அதிக வட்டிக்கு பிற நிறுவனங்களில் கடன் பெற்றிருந்தால், விதிமுறைகளுக்கு உட்பட்டு குறைந்த வட்டிக்கு அந்த கடனை தாய்கோ வங்கியில் கலைஞர் சிறப்பு கடனுதவி திட்டத்தின் கீழ் மாற்றிக் கொள்ளலாம்.
தகுதிகள் என்ன?
- கலைஞர் கடனுதவி திட்டத்தின் பலனை பெறுவதற்கு விண்ணப்பத்தாரர் குறைந்தபட்சமாக 18 முதல் அதிகபட்சமாக 65 வயதுக்கு மிகாமல் இருப்பவராக இருக்க வேண்டும்.
- ஏற்கனவே இயங்கி வரும் மற்றும் புதிய குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்களின் சிபில் ஸ்கோர் 600 புள்ளிகள் இருக்க வேண்டும்.
- சிபில் ஸ்கோர் 600-க்கு கீழ் இருக்கக் கூடாது.
விண்ணப்பிப்பது எப்படி?
தாய்கோ வங்கியின் அனைத்து கிளைகளிலும் கலைஞர் கடனுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, கடன் தேவைப்படுவோர்கள் வங்கி கிளை மேலாளர்களை நேரில் அணுகி, அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
கடந்த 1961ம் ஆண்டு தாய்கோ வங்கி தொடங்கப்பட்டது. இது தமிழக சிறு, குறு, நடுத்தர, தொழில் துறையின்கீழ் இயங்கும், 250க்கும் மேற்பட்ட தொழிற்கூட்டுறவு சங்கங்களுக்கு கடன் வழங்கும் பணியை மேற்கொண்டுவரும் தாய்கோ வங்கி, தனிநபர், சிறு தொழில் நிறுவனங்களுக்கும் தற்போது கடன் வழங்குகிறது.