Tomato Price Hike: தக்காளி விலை தாறுமாறாக எகிற இதுதான் காரணம், ரூ.60-க்கு விற்பனை - அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம்
தக்காளி விலை கிடுகிடுவென உயர காரணம் என்ன என்பது தொடர்பாக, அமைச்சர் பெரிய கருப்பன் விளக்கமளித்துள்ளார்.
தக்காளி விலை கிடுகிடுவென உயர காரணம் என்ன என்பது தொடர்பாக, அமைச்சர் பெரிய கருப்பன் விளக்கமளித்துள்ளார்.
விளைச்சல் குறைவு - அமைச்சர் விளக்கம்:
தக்காளி விலை சில்லறை சந்தையில் கிலோ 120 ரூபாய் வரையில் விற்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இதுதொடர்பாக பேசியுள்ள அமைச்சர் பெரியகருப்பன் “நடப்பாண்டு கோடைகாலத்தில் கடும் வெப்பம் நிலவியதால் விவசாயிகள் தக்காளி பயிரிடுவது குறைந்தது. அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறந்ததாலும் தக்காளி விலை அதிகரித்துள்ளது. கோயம்பேட்டிற்கு நாளொன்றிற்கு 800 டன் தக்காளி வந்துகொண்டிருந்த நிலையில், அந்த வரத்து தற்போது 300 டன்களாக குறைந்துள்ளது.
பண்ணை பசுமை கடைகளில் தக்காளி:
விலையேற்றத்தை கருத்தில் கொண்டு, பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி, சென்னையில் 27 பண்ணை பசுமைக்கடைகளில் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்படும். பண்ணை பசுமை காய்கறி கடைகள் மட்டுமின்றி நடமாடும் காய்கறி அங்காடி மூலமாகவும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை திருச்சி, தூத்துக்குடி மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 62 இடங்களில் பண்ணை பசுமைக்கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. வெளிச்சந்தையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த விலையேற்ற சூழலை பயன்படுத்தி தக்காளியை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
என்ன பிரச்னை:
ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
iங்கு தக்காளி பொதுவாக மூன்று ரகமாக பிரித்து விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ முதல் ரக நாட்டு தக்காளி 80 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம் 70 ரூபாய்க்கும், மூன்றாம் ரகம் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு கோயம்பேடு மார்க்கெட்டில் சுமார் 9 லாரி வரை தக்காளி வரத்து இருக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிடுகிடுவென உயர்ந்த விலை:
இதுவே சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை 100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டு தக்காளி 15 கிலோ பெட்டி 800 ரூபாய்கும், நவீன் தக்காளி 15 கிலோ பெட்டி 900 ரூபாய்கும் விற்பனை செய்யபடுகிறது. தொடர் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டதன் காரணமாக வரத்து குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தக்காளியின் விலை மேலும் உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.