EMI Loan: நிறைய EMI கட்டுறீங்களா? - இனிமே கவலையை விடுங்க.. வந்தாச்சு ஒரே கடன் திட்டம்!
ஒரு பொருளை வாங்க மொத்தமாக பணம் இல்லாத நிலையில், மாதத்தவணை செலுத்தி அதனை முதலிலேயே சொந்தமாக்கி கொள்ளும் இந்த நடைமுறையை பலரும் பின்பற்றி வருகின்றனர்.

EMI கட்டும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக சவுத் இந்தியன் வங்கி புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதனைப் பற்றி நாம் காணலாம்.
EMI என்பது இன்றைய காலக்கட்டத்தில் இன்றியமையாத ஒன்றாக மாறி விட்டது. ஒரு பொருளை வாங்க மொத்தமாக பணம் இல்லாத நிலையில், மாதத்தவணை செலுத்தி அதனை முதலிலேயே சொந்தமாக்கி கொள்ளும் இந்த நடைமுறையை பலரும் பின்பற்றி வருகின்றனர். வீட்டு உபயோக பொருட்கள் தொடங்கி வீடு, நிலம், கார், பைக், மின்னணு பொருட்கள், கல்வி கட்டணம் என அனைத்தும் EMI வரம்புக்குள் வந்து விட்டது. இதில் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் போன்றவை பல்வேறு சலுகைகளுடன் வட்டியுடன் கூடிய EMI ஆப்ஷன்களை வழங்குகிறது.
ஆனால் EMI திட்டம் சாமானிய மனிதர்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. மாதம் சம்பள பணத்தில் ஒரு குறிப்பிட்டத் தொகையை EMI திட்டங்களுக்கு கட்டணமாக செலுத்தும் நிலை உள்ளது. இதனால் சேமிப்பு என்ற ஒன்றே இல்லாமல் போய்விட்டது. பலரும் பல EMIகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பணம் கிடைக்காதா, ஒரே கடன் தொகையை மட்டும் பராமரிக்கலாமே என நினைப்போம்.
சவுத் இந்தியன் வங்கி புதிய திட்டம்
இப்படியான நிலையில் சவுத் இந்தியன் வங்கி புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, Power CONSOL என்ற புதிய கடன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் ஒருங்கிணைந்த EMI திட்டமாக பல EMI கடன்களை மிகவும் திறமையாக மறுசீரமைக்கவும் நிர்வகிக்கவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன்கள், கார் கடன், கல்விக் கடன், தனிநபர் கடன் மற்றும் நீண்ட கால கடன்கள் உள்ளிட்ட பல்வேறு கடன்களை குறைந்த வட்டி விகிதம் மற்றும் ஒருங்கிணைந்த EMI உடன் ஒரே கடனாக ஒருங்கிணைக்க உதவுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர் வீடு அல்லது வணிக கட்டட இடத்தை அடமானம் வைத்து சொத்து மதிப்பில் 75 சதவிகிதம் வரை கடன் வாங்கலாம். அதாவது தனி நபர்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.3 கோடி வரை ஒருங்கிணைப்பு கடன்களைப் பெற்று ஒருங்கிணைந்த கடன்களுக்கு 15 ஆண்டுகள் வரையிலும், வீட்டுக் கடன் இருப்பு பரிமாற்றங்களுக்கு 30 ஆண்டுகள் வரையிலும் திருப்பிச் செலுத்தலாம். 30 முதல் 55 வயதுக்குட்பட்ட சம்பளம் பெறும் வாடிக்கையாளர்கள், சுயதொழில் செய்பவர்கள், வேலை செய்யாதவர்கள் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
திருப்பிச் செலுத்துதலை எளிதாக்குவதையும் ஒரே நேரத்தில் பல கடன்களை நிர்வகிப்பதாலும் ஏற்படும் நிதிச் சுமையைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்மூலம் கடன் தொகை குறைவதை காட்டிலும் வட்டித் தொகை குறையும். இதனால் பொருளாதார சுமை கட்டுப்படுத்தப்படும். இது சிபில் ஸ்கோரிலும் எதிரொலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இந்த திட்டம் கைகொடுத்தால் விரைவில் மற்ற வங்கிகளிலும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.





















