Marriage Loan: திருமணத்திற்கு கடன் வாங்கலாமா? - வங்கிகள் தரும் தொகை இவ்வளவா?
நிலையான வருமானமும், சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தும் திறனும் இருந்தால் திருமணத்திற்காக கடன் வாங்குவதில் எந்த பிரச்னையும் இருக்காது. இல்லாவிட்டால் நீங்கள் இதில் எச்சரிக்கையுடன் முடிவெடுக்க வேண்டும்.

திருமணம் நம் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு அத்யாயமாக அமையும். வீட்டில் ஒரு மனை போட்டு திருமணம் செய்த காலமெல்லாம் மலையேறி விட்டது. இப்போதெல்லாம் திருமணத்திற்கு பல்வேறு விதமான கனவுகளுடன் இன்றைய இளம் தலைமுறையினர் உலா வருகின்றனர். உள்ளூரில் திருமணம், வெளிநாட்டில் ஹனிமூன், ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட், போஸ்ட் வெட்டிங் போட்டோஷூட் என வசதி இருப்பவர்களும் சரி,வசதி இல்லாதவர்களும் சரி திருமணத்தை மிகப்பெரிய அளவில் ஆடம்பரமாக கொண்டாட வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்கேற்ப கடன்களும் வாங்குகிறார்கள். தற்காலத்தில் வங்கிகளில் தனிநபர் கடன்கள் வழங்கப்படுகிறது. அதில் திருமணத்திற்கென பிரத்யேக கடன்கள் வழங்கப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.
கடன் வாங்குவதில் கவனம்
நிலையான வருமானமும், சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தும் திறனும் இருந்தால் திருமணத்திற்காக கடன் வாங்குவதில் எந்த பிரச்னையும் இருக்காது. இல்லாவிட்டால் நீங்கள் இதில் எச்சரிக்கையுடன் முடிவெடுக்க வேண்டும். நிதி சுமை ஏற்பட்டு பல பிரச்னைகளை உண்டாக்கும் என்பதால் கடன்களை நன்கு யோசித்து வாங்க வேண்டும்.
எந்த வங்கி எவ்வளவு கடன் வழங்கும்?
- HDFC வங்கியில் 1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான காலத்துடன் ரூ.50,000 முதல் ரூ.40 லட்சம் வரை கடன் பெற முடியும். வட்டி விகிதம் 10.9% முதல் 21% வரை செயல்படுத்தப்படுகிறது.
- ஐசிஐசிஐ வங்கியில் 10.8% முதல் 16.5% வரை வட்டி விகிதத்தில் ரூ.50 லட்சம் வரை கடன்களைப் பெறலாம். இதனை திருப்பி செலுத்தும் காலமாக 1 முதல் 6 ஆண்டுகள் வரை தேர்வு செய்யலாம்.
- ஆக்சிஸ் வங்கியில் நீங்கள் ரூ.50,000 முதல் ரூ.40 லட்சம் வரை 9.99% வட்டி விகிதத்தில் கடன்களைப் பெறலாம்
- கோடக் வங்கியிலும் குறைந்தபட்சம் ரூ.50,000 முதல் அதிகபட்சம் ரூ.40 லட்சம் வரை கடன் பெறலாம். வட்டி 10.99% முதல் 25% வரை இருக்கும். இது 6 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் காலத்தைக் கொண்டுள்ளது.
- பந்தன் வங்கியில், நீங்கள் ரூ.50,000 முதல் ரூ.25 லட்சம் வரை கடன் பெறலாம். நீங்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் கடன் வாங்கியிருந்தால் வட்டி விகிதம் 9.47% இல் தொடங்குகிறது.
திருமணக்கடன் வாங்குவதற்கான தகுதி
21 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். தற்போது பணியாற்றும் கம்பெனியில் குறைந்தது 2 ஆண்டுகள் வரை வேலை செய்திருக்க வேண்டும். குறைந்தப்பட்ச வருமானம் பெறுபவராக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வங்கிகளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெர்சனல் லோன் பிரிவுக்கு சென்று உங்கள் நிதி தேவைக்கேற்ப கடன் வேண்டி விண்ணப்பிக்கலாம். உரிய ஆவணங்களை சமர்பிக்கும் பட்சத்தில் அதிகாரிகள் கடனை அங்கீகரித்து 72 மணி நேரத்துக்குள் கடன் தொகையை உங்கள் வங்கி கணக்கில் சமர்பிப்பார்கள்.





















