Aadhar Linking: போஸ்ட் ஆப்பிஸ் அக்கவுண்ட் இருக்கா? இன்னும் 20நாள் தான் இருக்கு.. இதை கட்டாயம் செஞ்சி முடிச்சிருங்க!
ஆதார் அட்டை இணைக்காவிட்டால், உங்களின் தபால் அலுவலக கணக்கு முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Aadhar Linking: ஆதார் அட்டை இணைக்காவிட்டால், உங்களின் தபால் அலுவலக கணக்கு முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தபால் அலுவலக கணக்கு:
வங்கியில் எப்படி சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறோமோ, அதேபோல, அரசுக்கு சொந்தமான தபால் நிலையங்களிலும் சேமிப்பு கணக்கு வைத்துக் கொள்ளலாம். சிறந்த வருமானத்தை மட்டும் பெறுவதுடன், நீங்கள் முதலீடு செய்த பணத்துக்கு உத்தரவாதமும், பாதுகாப்பும், வட்டி வகிதமும் பன்மடங்கு நன்மையை தரக்கூடியது. அதாவது, தபால் அலுவலக சேமிப்பு கணக்கு, பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு சான்றிதழ், சுகன்யா சம்ரித்து யோஜனா, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் போன்ற 9 வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த 9 வகையான திட்டங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தபால் அலுவலக கணக்கிற்கு பெருமளவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
ஆதாரை இணைப்பது கட்டாயம்:
இந்நிலையில், தபால் அலுவலக கணக்கை திறப்பதற்கு முன், வாடிக்கையாளர்கள் சில முக்கியமான விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். அதில் குறிப்பாக, அஞ்சலகக் கணக்குடன் ஆதாரை எண்ணை இணைக்க வேண்டும். செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் சிறு சேமிப்பு கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதிக்குள மக்கள் தங்களது தபால் அலுவலக கணக்குடன் இணைக்கத் தவறினால், தபால் அலுவலக கணக்கு செயலிழக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உங்களின் தபால் அலுவலக சேமிப்பு கணக்கு முடக்கப்பட்டால், உங்களால் முதலீடு செய்ய முடியாது. முதலீட்டின் முதிர்வு பலன்களை பெற வாய்ப்பு இருக்காது மேலும், கணக்கில் வட்டி வரவு வைக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி இணைப்பது?
- முதலில் https://www.indiapost.gov.in/VAS/Pages/CustomerLinking.aspx என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
- அதில், உங்கள் கணக்கின் User ID மற்றும் Password-ஐ உள்ளிட வேண்டும்.
- பின்னர், உங்கள் ஆதாரை எண்ணை உள்ளிட்டு, எந்த கணக்குடன் இணைக்க நினைக்கிறீர்களோ அதை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்னர், ஆதார் எண் இணைக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த உங்கள் எண்ணிற்கு மெசேஜ் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
- மேலும், ஆதார் அட்டை, உங்கள் கணக்கின் கடவுச்சொல்லுடன் அருகில் உள்ள தபால் அலுவலகம் சென்று இணைத்துக் கொள்ளலாம்.
முக்கியத்துவம் பெறும் ஆதார்:
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை, தற்போது தனிமனிதனின் தவிர்க்க முடியாத அடையாள அட்டையாக மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஆதார் அட்டையை பான் கார்ட் உடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. அதற்காக பலமுறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், ஜுன் 30ம் தேதியுடன் அந்த அவகாசம் நிறைவடைந்தது. அந்த தேதிக்குள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் அனைத்தும் தற்போது செயலிழக்க தொடங்கியுள்ளன. அதேபோல, ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு இணைத்திருப்பதும் அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.