Petrol under GST: பெட்ரோலுக்கு ஜிஎஸ்டி: அன்று ஆதரித்த பிடிஆர்... இன்று எதிர்ப்பது ஏன்?
மத்திய அரசு எக்ஸைஸ் வரி விதிப்பது மட்டுமல்லாமல் சில வகையிலான செஸ் (சாலை, அக்ரி உள்ளிட்ட) வரியை விதிக்கின்றன. இந்த செஸ் வரிகளில் மாநில அரசுகளுக்கு எந்தவிதமான பங்கும் கிடையாது.
பெட்ரோல், டீசல் விலையில் எப்போதுமே தகராறுதான். மாநில அரசு குறைக்க நினைத்தால் குறைக்க முடியும் என மத்திய அரசு கூறும். மத்திய அரசு கூட குறைக்க முடியுமே ஏன் குறைக்க முடியாது என கேட்டால் காங்கிரஸ் ஆட்சியில் எண்ணெய் பத்திரங்களுக்கு செலவு செய்ய வேண்டி இருக்கிறது என பதில் வரும். எண்ணெய் பத்திரங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை விட பல மடங்கு மத்திய அரசு வருமானம் ஈட்டிவிட்டது என்னும் கேள்விக்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை.
அடுத்த சச்சரவு ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல்!
ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் விலை இருந்தால் விலை குறையும் என பல மாநில அரசுகளும் பேசி வந்தன. தற்போது ஜிஎஸ்டி வரம்புக்குள் வருவதற்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. அதனால் பெட்ரோல் டீசல் விலை குறையாததற்கு மாநில அரசுகளே காரணம் என அடுத்த செய்தி பரப்பப்படுகிறது.
இந்தியாவில் இரண்டு வகையான வரி முறைகள் உள்ளன. நேரடி மற்றும் மறைமுக வரி. நேரடி வரி என்பது தனிநபர் மற்றும் நிறுவனங்களின் வருமான வரி. இதில் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் மத்திய அரசு வசம் மட்டுமே இருக்கிறது. மாநில அரசுகளுக்கு இதில் எந்த பங்கும் இல்லை.
அடுத்தது மறைமுக வரி. அதாவது பொருட்கள் மற்றும் சேவைகள் மீது விதிக்கப்படும் வரி. இந்த வரியை மாநில அரசுகளும் விதிக்க முடியும். மத்திய அரசும் விதிக்க முடியும் என்னும் சூழல் இருந்தது. இதனை மாற்றிதான் ஒரு நாடு, ஒரு வரி என ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது. இதில் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மதுவகைகள் விலக்குகொடுக்கப்பட்டிருந்தது. இந்த பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியின் மூலம் கிடைக்கும் வருமானமே மாநில அரசுகள் செயல்பட்டு வந்தது.
மத்திய அரசு எக்ஸைஸ் வரி விதிப்பது மட்டுமல்லாமல் சில வகையிலான செஸ் (சாலை, அக்ரி உள்ளிட்ட) வரியை விதிக்கின்றன. இந்த செஸ் வரிகளில் மாநில அரசுகளுக்கு எந்தவிதமான பங்கும் கிடையாது.
எக்ஸைஸ் வரி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிகப்படுகிறது. செஸ் வரி மத்திய அரசுக்கு மட்டுமே. பெட்ரோலிய பொருட்களில் மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ளும் எக்ஸைஸ் வரியின் பங்கு 90 சதவீதத்தில் இருந்து 4 பங்காக குறைந்திருக்கிறது. அதாவது பெட்ரோலிய பொருட்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தை 96 சதவீதம் அளவுக்கு செஸ் வரியாக மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது, மாநிலங்களுக்கு எந்த பங்கும் இல்லை என தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் தெரிவித்திருக்கிறார்.
ஜிஎஸ்டிக்குள் வந்தால்
ஒருவேளை பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் வந்தால் விலையை நிர்ணயம் செய்வதில் மாநிலங்களுக்கு எந்த உரிமையும் இருக்காது. ஆனால் மத்திய அரசு தொடர்ந்து செஸ் வரியை விதித்து மொத்த வருமானத்தை குவித்துவிடும் என்பதுதான் மாநில அரசுகளின் கவலை. இதற்காகவே பெட்ரோல் டீசல் விலையில் செஸ் கூடாது என மாநில அரசுகள் கோருகின்றன.
இன்று ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்த பிறகு சில மாதங்களுக்கு பிறகு செஸ் விதித்தால் மாநில அரசுகள் எதுவும் செய்ய முடியாது. ஆனால் வருமானம் மத்திய அரசுக்கு செல்லும், மாநில அரசுகளுக்கு எதுவும் இருக்காது, இறுதியாக பாதிக்கப்படுவது மக்களாகதான் இருக்கும்.
தற்போது ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவந்தால் அதிகபட்ச ஜிஎஸ்டி என்பது 28 சதவீதம்தான். அதனால் தற்போதைய விலையை விட மிக கணிசமான அளவுக்கு குறையும். ஒருவேளை செஸ் விதித்தால் கூட தற்போதைய விலையை விட குறைவாகதான் இருக்கும். ஆனால் மாநிலங்கள் வரி விதிக்கும் அதிகாரத்தை இழந்து மொத்தமாக மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டி இருக்கும்.
உதாரணத்துக்கு எஸ்.யு.வி கார்களை எடுத்துக்கொண்டால் அதிகபட்ச வரியான 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதன் மீது 22 சதவீத செஸ் விதிக்கப்படுகிறது. இதேபோல பெட்ரோலிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டால் மாநில அரசுகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை.
மாநில அரசுகளின் கோரிக்கையில் நியாயம் இல்லாமல் இல்லை!