முடிவுக்கு வருகிறது 2021.. டிசம்பர்ல இத்தனை விஷயங்களுக்கு விலை ஏறுது.. லிஸ்ட் இதோ
கொரோனா இரண்டாம் அலையில் அடித்து வேகமாக நகர்ந்த வருடத்தின் கடைசி மாதமான இந்த டிசம்பர் மாதம் 6 விஷயங்கள் வணிக ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக காத்திருக்கின்றன.
ஏறத்தாழ 2021 இன் முடிவுக்கு வந்துவிட்டோம், கோரோணா இரண்டாம் அலையில் அடித்து வேகமாக நகர்ந்த வருடத்தின் கடைசி மாதம் இது. எல்லா மாதங்களும் வணிக ரீதியாக மக்களின் செலவுகளை அதிகரித்து பின்னடைவை ஏற்படுத்த புதிது புதிதாக எதையாவது உருவாக்கிக் கொண்டிருக்கும். அது போல நம்மை பொருளாதார ரீதியாக தாக்குவதற்கு
இந்த டிசம்பர் மாதம் இன்னும் வேறென்ன மிச்சம் வைத்திருக்கிறது என்று பார்த்தால்… 6 விஷயங்கள் பொருளாதார ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக காத்திருக்கின்றன.
ஆயுள் காப்பீடு விலை உயர்வு: டேர்ம் இன்சூரன்ஸ் என்றும் அழைக்கப்படும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் பிரீமியம் விலையில் உயர்வைக் காண்கின்றன. சர்வதேச சந்தைகளில் மறுகாப்பீட்டு விகிதங்கள் ஏறுமுகமாக இருப்பதால் இது ஏற்படுகிறது. மேலும், அதிகரித்து வரும் தொற்றுநோய் காரணமாக இறப்பு விகிதம் அதிகரிப்பதால் இந்த உயர்வு செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக, குழு காலக் காப்பீட்டுச் செலவில் இந்த விலை ஏற்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, இது 30-100 சதவிகிதம் வரையிலான பிரீமியத்தில் கூர்மையான உயர்வைக் கண்டுள்ளது, இப்போது தனிநபர் டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசிகளிலும் இதுவே பின்பற்றப்படும். டேர்ம் திட்டங்களுக்கு, ஆயுள் காப்பீட்டாளரின் துரதிர்ஷ்டவசமான மரணம் ஏற்பட்டால், நாமினிகள் காப்பீட்டுத் தொகையைப் பெற உரிமை உண்டு.
எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் இஎம்ஐ பயன்படுத்த கட்டணம்: டிசம்பர் 1 முதல் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும், கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளுக்கு செயல்பாட்டு கட்டணமும் (Processing fee),அதனுடன் வரியும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது 99 ரூபாய் செயல்பாட்டு கட்டணமும், அதனுடன் வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என எஸ்பிஐ கார்டு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ கிரெடிட் கார்டினை பயன்படுத்தி நேரடியாக ஷாப்பிங் செய்யும் போதும், ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போதும், ஆப்கள், இணையதளங்கள் மூலம் வாங்கும்போதும், நீங்கள் கிரெடிட் கார்டினை பயன்படுத்தி கட்டணம் செலுத்தினால், அதற்காக கட்ட வேண்டிய EMI தொகைக்கு செயல்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என எஸ்பிஐ கார்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய கட்டண நடைமுறைகளின் படி, டிசம்பர் 1-க்கு முன் செய்யப்படும் பரிவர்த்தனைக்கு, இந்த செயல்பாட்டு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிக சிலிண்டர் விலை உயர்வு: ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில் டிசம்பர் மாதத்தின் முதல் நாளான இன்று வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் விலை 100 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலையேற்றத்தின் படி, 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர்களின் விலை 100 ரூபாய் அதிகரித்துள்ளது. இது மக்களுக்கு இன்னும் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இனி பயனாளர்கள் வணிக சிலிண்டர்களுக்கு கூடுதலாக 100 ரூபாய் செலவு செய்ய வேண்டி இருக்கும். குறிப்பாக சென்னையில் சிலிண்டர் விலை 2,234.50 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் இந்த வணிக சிலிண்டரின் விலை 2,133 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது மாதமாக அதிகரிக்கப்பட்டுள்ள இந்த வணிக கேஸ் விலையானது, பயனாளர்கள் மத்தியில் கூடுதல் சுமையை ஏற்படுத்தலாம். ஏனெனில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் இதன் விலையானது 266 ரூபாய் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் இரண்டு மாதங்களில் 366 ரூபாய் ஒரு சிலிண்டருக்கு விலை கூடியிருக்கிறது. இந்த விலையேற்றம் காரணமாக ஓட்டல்களில் உணவு மற்றும் பானங்கள் விலை உயரும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.
ஜியோ கட்டண உயர்வு: ஏர்டெல் நிறுவனம் தனது கட்டண உயர்வை நவம்பர் 26ம் தேதி முதல் அமல்படுத்திய நிலையில், வோடஃபோன் நிறுவனமும் உடனடியாக கட்டண உயர்வை அமல்படுத்தியது. இதைத்தொடர்ந்து, மற்ற நிறுவனங்களும் கட்டண உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஜியோவும் தனது கட்டண உயர்வை அறிவித்துள்ளது. ஜியோ நிறுவனத்தின் கட்டண உயர்வு டிச.1ம் தேதி முதல் அமலாகிறது. இந்த கட்டண உயர்வை தொடர்ந்து 28 நாட்களுக்கான ஜியோ போன் திட்டத்தின் கட்டணம் 75 ரூபாயில் இருந்து 91 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் டேட்டா பிளானில், மாதத்திற்கு 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலுடன் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளான் ரூ.129லிருந்து, ரூ.155 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பி.என்.பி சேமிப்பு பணத்திற்கு வட்டி விகிதம் குறைப்பு: பஞ்சாப் நேஷனல் வங்கியில் சேமிப்பு கணக்கில் அளிக்கப்பட்ட வட்டி விகிதங்கள் டிசம்பர் 1 முதல் மாற்றப்படவுள்ளன. வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, பிஎன்பி வங்கியின் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 2.90 சதவீதத்தில் இருந்து 2.80 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதுஅதாவது ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும், புதிய வாடிக்கையாளர்களுக்கும் சேமிப்புக் கணக்கில் ஆண்டுக்கு 2.80 விழுக்காடு வட்டி வழங்கப்படும் என பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.
வீட்டு உபயோக பொருட்கள் விலை உயர்வு: முக்கிய உள்ளீட்டுப் பொருட்களான காப்பர், அலுமினியம், ஸ்டீல் போன்றவற்றின் விலை அதிகரிப்பாலும், விமானத்தில் இருந்து கொண்டுவரும் போக்குவரத்துக் கட்டண அதிகரிப்பாலும் எல்இடி டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்றவற்றின் விலை 10 சதவீதம் வரை உயர்கிறது என உற்பத்தியாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் சப்ளை குறைவால், டி.வி. பேனல்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வால், பிளாஸ்டிக் விலையும் அதிகரித்துள்ளது. மூலப் பொருட்கள் விலை உயர்வால் வேறு வழியின்றி விலை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக எல்.ஜி. பேனசோனிக், தாம்ஸன் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், சோனி நிறுவனம் விலை உயர்வு குறித்து ஆலோசித்து வருகிறது.