LIC வழங்கும் புதிய சலுகை, காலாவதியான இன்சூரன்ஸை இப்படி மீட்கலாம்..!
காலாவதியான காப்பீட்டு திட்டத்தை மீட்க எல்.ஐ.சி. காப்பீட்டளர்களுக்கு சலுகைகளுடன் வாய்ப்பு வழங்கியுள்ளது.
கொரோனா நோய் தொற்று காரணமாக நாட்டு மக்கள் பலர் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் ஊரடங்கும் ஒன்றன் பின் ஒன்றாக அமல்படுத்தப்பட்டு வந்தமையால் பெரும்பாலானோர் வேலையின்றி, சம்பளமின்றி தினமும் சாப்பிடவே கஷ்டப்பட்டு வந்த காலங்கள் இருந்தன, பலரின் தொழில் முடங்கியதால் வங்கிகளின் கடன் போன்றவைக்கு சில சலுகைகளை அரசு அறிவித்து வந்தது. பெரிதாக பணப்புழக்கம் மக்களிடையே இல்லாததால் பல எல்.ஐ.சி பாலிசிதாரர்கள் தமது காப்பீட்டு ப்ரீமியத்தை சரிவர செலுத்தாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவிடும் நோக்கில் இந்தியாவின் பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி, தொற்றுநோய் காலத்தை கணக்கில் கொண்டு காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்கும் சலுகைகளை தற்போது பாலிசிதாரர்களுக்கு வழங்கியுள்ளது.
இந்தச் சலுகை அக்டோபர் 22-ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும். கடைசி ப்ரீமியம் செலுத்தப்பட்டு ஐந்து வருடத்துக்கு மேல் ஆகாத பாலிசிகள் வரை இந்த சலுகையைப் பயன்படுத்தி புதுப்பித்துக்கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு. வழக்கமாக இவ்வாறு பாலிசிகளை புதுப்பிக்கும்போது அபராத கட்டணம் விதிக்கப்படும். ஆனால் இம்முறை இந்த அபராத கட்டணத்திலும் சில சலுகைகளை எல்.ஐ.சி வழங்குகிறது. அதன்படி செலுத்த வேண்டிய ப்ரீமியத் தொகை ரூ. 1 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், அதற்கான அபராதத் தொகையில் 20% வரை தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ரூ.2,000 வரை அபராதத் தொகையில் தள்ளுபடி வழங்கப்படும் என்று எல்.ஐ.சி அறிவித்துள்ளது.
இந்த அபராதத் தொகைக்கான சலுகை டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் சில அதிக ரிஸ்க் உள்ள பாலிசிகளுக்கு பொருந்தாது என்று எல்.ஐ.சி கூறுகிறது. ஆனால் சிலவகை மருத்துவ காப்பீடுகளுக்கு இந்தச் சலுகை பொருந்தும். அதனை தொடர்ந்து ப்ரீமியம் தொகை ரூ.1-3 லட்சத்துக்குள் இருந்தால், அபராதத் தொகையில் 25% வரை தள்ளுபடி வழங்கப்படும். அதன்படி அதிகபட்சம் ரூ. 2,500 வரை தள்ளுபடி கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் ப்ரீமியத் தொகை இருந்தால், அபராதத் தொகையில் 30% வரை தள்ளுபடி வழங்கப்படும். அப்படியென்றால் அதிகபட்சம் ரூ.3,000 வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று எல்.ஐ.சி. அறிவித்துள்ளது.
எனவே கடந்த ஐந்து வருடங்களுக்குள் காலாவதியான பாலிசிகளை எல்.ஐ.சி வழங்கும் இந்தச் சலுகையை பயன்படுத்தி தமது காப்பீட்டை 22-ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்.
இது குறித்து எல்.ஐ.சி அறிக்கை கூறுவதாவது, "தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் சரியான நேரத்தில் பிரீமியம் செலுத்த முடியாமல் போனதால் பாலிசிதாரர்களின் நலனுக்காக இந்த சலுகை தொடங்கப்பட்டது. காப்பீட்டை மீட்டெடுப்பதற்கு பழைய பாலிசிக்களை புதுப்பிப்பது சிறந்தது. எல்ஐசி அதன் பாலிசிதாரர்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பிற்கான விருப்பத்தை மதிக்கிறது. இந்த சலுகை எல்ஐசியின் பாலிசிதாரர்களுக்கு அவர்களின் கொள்கைகளை புதுப்பிக்கவும், ஆயுள் காப்பீட்டை மீட்டெடுக்கவும் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு நிதி பாதுகாப்பை உறுதி செய்யவும் ஒரு நல்ல வாய்ப்பாகும்" என்றும், பயன்படுத்திக்கொள்ளுமாறு எல்.ஐ.சி தெரிவித்துள்ளது.