அவ்ளோதான்.. இனி EMI கட்டலனா செல்போன் வேலை செய்யாது - கவலையில் வாடிக்கையாளர்கள்
கடனில் வாங்கப்படும் செல்போன்களுக்கு முறையாக தவணையை கட்டாவிட்டால் செல்போன் தானாகவே முடங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்தியாவில் கடன் வழங்குவதற்காக ஏராளமான நிதி நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்த நிதி நிறுவனங்கள் மூலமாக செல்போன்கள் உள்ளிட்ட பல பொருட்களையும், வீட்டு உபயோக பொருட்களையும் கடனில் வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது.
கடனில் வாங்கப்படும் செல்போன்கள்:
குறிப்பாக, செல்போன்களை கடன் மூலமாக வாங்கும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. நுகர்வோர் கடனில் பெரும்பாலான கடன்கள் செல்போன் வாங்குவதற்காக வாங்கப்படுவதாக இருக்கின்றன. அவ்வாறு செல்போனுக்காக பலரும் ரூபாய் 1லட்சம் வரை கடன் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், செல்போன் வாங்குவதற்காக இஎம்ஐ தவணையில் கடன் பெறும் பலரும் அந்த கடனைத் திருப்பிச் செலுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தடுப்பதற்காக கடன் வழங்கிய நிதி நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தன.
முடக்க திட்டம்:
இந்த நிலையில், கடனைத் திருப்பிச் செலுத்துவதை உறுதிப்படுத்துவதற்காக செல்போன் வாங்குவதற்காக வாங்கப்படும் கடனை வாடிக்கையாளர்கள் திருப்பிச் செலுத்தாவிட்டால் அந்த செல்போனை முடக்க நிதி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது. நிதி நிறுவனங்களின் இந்த நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக கடனில் வாங்கப்படும் செல்போன்களில் செயலி ஒன்று பதிவேற்றம் செய்யப்படும். அந்த செயலியை வாடிக்கையாளர்கள் நீக்க முடியாத அளவிற்கு உருவாக்க திட்டமிட்டுள்ளனர். வாடிக்கையாளர்கள் முறையாக கடனின் தவணையை திருப்பிச் செலுத்தாவிட்டால் செல்போன் முடங்கி செயலிழந்துவிடும். நிதி நிறுவனங்களின் இந்த முடிவுக்கு ரிசர்வ் வங்கி விரைவில் அதிகாரப்பூர்வமாக அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷாக்கில் வாடிக்கையாளர்கள்:
இந்த முடிவு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலமாக, வாடிக்கையாளர்களின் தனியுரிமை பறிபோகுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த செயலால் வாடிக்கையாளர்களின் தனியுரிமை பாதிக்கப்படாத வகையில் இருக்க வேண்டும் என்றும் நிதிநிறுவனங்களுக்கு ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது.
கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களின் செல்போனை முடக்கும் உரிமையை அளிக்கக்கூடாது என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், நிதி நிறுவனங்களுக்குத்தான் இழப்பு ஏற்படும் பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். நாட்டில் செல்போன் உள்ளிட்ட மின்னனு சாதன பொருட்களில் 3ல் ஒரு பங்கை வாடிக்கையாளர்கள் கடனில் வாங்குவதாக ஹோம் கிரெடிட் ஃபைனான்ஸ் என்ற நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

செல்போன் மட்டுமின்றி இன்று நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் பலவற்றையும் கடனில் வாங்கும் பழக்கம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஃப்ரிட்ஜ், தொலைக்காட்சி, நாற்காலிகள், இரு சக்கர வாகனங்கள் என பலவற்றையும் இஎம்ஐ மூலமாக வாங்கும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இது ஆரோக்கியமற்ற போக்கு என்றே பாெருளாதார நிபுணர்களும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். பணத்தை சேமித்து வைத்து பொருட்கள் வாங்க வேண்டும் என்ற நிலை மாறி, கடன் வாங்கி பொருட்கள் வாங்க வேண்டும் என்ற நிலைக்கு மக்கள் மாறி வருவது அவர்களின் குடும்ப பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என்று எச்சரிக்கின்றனர். மேலும், வருவாய்க்கு மீறி ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தை இந்த கடன் வாங்கும் பழக்கம் உருவாக்குவதாகவும் எச்சரிக்கின்றனர்.





















