Market capital loss: அடேங்கப்பா..! ஒரே வாரத்தில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு... இந்தியாவின் பெரு நிறுவனங்களுக்கு நடந்தது என்ன?
இந்தியாவின் பெரு நிறுவனங்கள் ஒரே வாரத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாயை இழந்து இருப்பது, முதலீட்டாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பெரு நிறுவனங்கள் ஒரே வாரத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாயை இழந்ததில், ஸ்டேட் பேங்க் முதன்மையான இடத்தை பிடித்துள்ளது.
ரூ.1 லட்சம் கோடி இழப்பு:
நாட்டின் மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில், முதல் 10 இடங்களில் உள்ள 7 நிறுவனங்களின் சந்தை மூலதனம் கடந்த ஒரு வாரத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. அதில் பொதுத்துறை நிறுவனமான ஸ்டேட் பேங்க் முதன்மையானதாக இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. டாப்-10 நிறுவனங்களில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பார்தி ஏர்டெல் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை பின்னடைவை கண்டுள்ளன. இதனால், கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 0.66 சதவிகிதம் அதாவது 438.95 புள்ளிகள் சரிந்தது குறிப்பிடத்தக்கது. சந்தை மூலதனத்தின் இழப்பை சந்தித்த அந்த நிறுவனங்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இழப்பைச் சந்தித்த நிறுவனங்களின் பட்டியல்:
- பாரத ஸ்டேட் வங்கியின் சந்தை மூலதன மதிப்பு ரூ.38,197.34 கோடி சரிந்து, ரூ.5,11,603.38 கோடியாக உள்ளது. முதல் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் எதிர்பார்த்த அளவு இல்லாததை தொடர்ந்து, வெள்ளியன்று பங்குச்சந்தை நிறைவடையும் போது, ஸ்டேட் வங்கியின் பங்குகளின் மதிப்பு 3% வரை வீழ்ச்சி கண்டது.
- ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனம் (எம்கேப்) ரூ.17,201.84 கோடி குறைந்து, ரூ.6,79,293.90 கோடியாக உள்ளது
- ஐடிசியின் மதிப்பு ரூ.16,846.18 கோடி குறைந்து ரூ.5,66,886.01 கோடியாக சரிந்துள்ளது
- பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.14,366.34 கோடி வீழ்ச்சி கண்டு ரூ.4,32,932.18 கோடியாக நீடிக்கிறது
- ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.11,806 கோடி குறைந்து ரூ.16,98,270.74 கோடியாக உள்ளது
- ஹிந்துஸ்தான் யூனிலீவரின் மதிப்பு ரூ.9,069.42 கோடி சரிந்து ரூ.5,98,299.92 கோடியாக நிலைகொண்டுள்ளது.
- பார்தி ஏர்டெல்லின் சந்தை மூலதன மதிப்பு ரூ.2,460.74 கோடி குறைந்து ரூ.4,97,908.56 கோடியாக உள்ளது.
வளர்ச்சி கண்ட நிறுவனங்கள்:
-
அதேநேரம், டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.31,815.45 கோடி உயர்ந்து ரூ.12,59,555.25 கோடியாக அதிகரித்துள்ளது.
- இன்ஃபோசிஸ் நிறுவனமும் ரூ.15,791.49 கோடியை சேர்த்ததன் மூலம் அதன் சந்தை மூலதன மதிப்பு ரூ.5,72,062.52 கோடியாக உயர்ந்துள்ளது
- ஹெச்டிஎப்சி வங்கியின் மதிப்பும் ரூ.7,080.63 கோடி அதிகரித்து அதன் சந்தை மூலதன மதிப்பு ரூ.12,47,403.26 கோடியாக ஏற்றக் கண்டுள்ளது.
பல்வேறு ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நாட்டின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக நீடிக்கிறது. அதனை தொடர்ந்து, TCS, HDFC வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், இன்ஃபோசிஸ், ஐடிசி, பாரத ஸ்டேட் வங்கி, பார்தி ஏர்டெல் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை நாட்டின் மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.