ஐபிஎல்: இரண்டு புதிய அணிகள் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றன?
ஐபிஎல் பிராண்ட் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்துவருகிறது. பிசிசிஐ-க்கு பணம் காய்ச்சி மரமாக உருவாகி இருக்கும் ஐபிஎல்-க்கு மேலும் இரு கிளைகளை உருவாக்க முடிவெடுத்திருக்கிறது.
தற்போது டி20 உலககோப்பை போட்டிகள் தொடங்கிவிட்டாலும் ஐபிஎல்-ன் கவனம் குறையாமல் இருக்கிறது அல்லது குறையாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. ஐபிஎல் பிராண்ட் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்துவருகிறது. பிசிசிஐ-க்கு பணம் காய்ச்சி மரமாக உருவாகி இருக்கும் ஐபிஎல்-க்கு மேலும் இரு கிளைகளை உருவாக்க முடிவெடுத்திருக்கிறது. இன்று (அக்டோபர் 25) புதிய அணிகளை பிசிசிஐ அறிவிக்கிறது.
பிசிசிஐக்கு என்ன கிடைக்கும்?
தற்போதைக்கு எட்டு அணிகள் ஐபிஎல்-ல் விளையாடுகின்றன. புதிதாக இரு அணிகள் உருவாகப்பட இருக்கின்றன. குறைந்தபட்ச விலையாக ரூ.2000 கோடி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனங்கள் மட்டுமே போட்டி போட முடியும்.
ஏலம் கிடைக்கும் அணி இந்த தொகையை மொத்தமாக செலுத்த தேவையில்லை என்பதால் பல நிறுவனங்களும் போட்டி போடுகின்றன. அதானி, மான்செஸ்டர் யுனைடெக் , ஆர்பி கோங்கா குழுமம், ஹிந்துஸ்தான் டைம்ஸ், ரோனி ஸ்குருவாலா, கோடக் குழுமம், ஜிண்டால் ஸ்டீல், அரவிந்தோ பார்மா, டாரண்ட் பார்மா உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஏலத்தில் கலந்துகொள்கின்றன. பாலிவுட் நட்சத்திரம் தீபிகா படுகோன் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து விண்ணப்பித்திருப்பதாக தெரிகிறது. புதிய அணிகளை பரிசீலனை செய்யும் பிசிசிஐ இன்றுக்குள் துபாயில் புதிய அணி குறித்து அறிவிக்கிறது. அகமதாபாத், லக்னோ, புனே, விசாகபட்டினம் , நாக்பூர், தர்மசாலா, கட்டாக் உள்ளிட்ட நகரங்களில் எதேனும் இரு அணிகள் தேர்வு செய்யப்படலாம்.
ஒரு விண்ணப்பத்தின் மதிப்பு ரூ. 10 லட்சம். 22 அணிகள் விண்ணப்பித்திருக்கின்றன. சுமார் 7,000 கோடி ரூபாய் முதல் ரூ.10,000 கோடி வரை இரு அணிகள் மூலம் பிசிசிஐக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
ஐபிஎல்-ன் ஒளிப்பரப்பு உரிமத்தை ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வைத்திருக்கிறது. 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை இந்த ஒப்பந்தம் இருக்கும். ஒரு போட்டிருக்கு ரூ.54.5 கோடி அளவுக்கு ஏலம் எடுத்திருக்கிறது. இதுவரை 60 போட்டிகள் நடைபெற்ற நிலையில் அடுத்த ஆண்டு 74 போட்டிகள் நடைபெறும் என்பதால் ஒளிப்பரப்பு மூலமும் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
ஐபிஎல் மீடியா உரிமம் யாருக்கு?
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமம் அடுத்த ஆண்டு முடிவடைவதால் 2023-ம் ஆண்டு முதல் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான ஏலமும் அடுத்த ஆண்டு தொடங்கும். 2018-ம் ஆண்டு ரூ.16,354 கோடிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஏலம் எடுத்திருந்தது. ஆனால் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்த ஏலத்தின் மதிப்பு இரு மடங்காக உயரும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஐபிஎல்-ல் ஆரம்பம் முதல் சோனி நிறுவனம் (2008 முதல் 2017 வரை) வைத்திருந்தது. ஆனால் 2018-ம் ஆண்டு நடந்த ஏலத்தை ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸிடம் பறிகொடுத்தது. தற்போது ஜீ மற்றும் சோனி குழுமங்கள் இணைந்திருக்கின்றன. தவிர ரிலையன்ஸ் குழுமம் வயாகாம் 18 மூலமாக ஸ்போர்ட்ஸ் பிரிவில் களம் இறங்க இருப்பதாக தெரிகிறது. அமேசாம் பிரைம் நிறுவனமும் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இந்த நிறுவனம் இந்தியா நியூசிலாந்து போட்டிகளுகான உரிமத்தை வைத்திருக்கிறது. கடந்த முறை கூகுள் மற்றும் பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் டிஜிட்டல் உரிமத்தை மட்டுமே பெறுவதற்கு போட்டியிட்டன. ஆனால் கிடைக்கவில்லை. தற்போது 2022-ம் ஆண்டு முதல் ஐபிஎல் விரிவடைவதால் 2023-ம் ஆண்டு நடக்க இருக்கும் மீடியா உரிமத்துக்கான ஏலமும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
யுனிகானாக மாறும் சிஎஸ்கே?
கடந்த 12 ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் சந்தை மதிப்பு வெகுவாக உயர்ந்திருக்கிறது. தற்போது 4200 கோடியாக இதன் சந்தை மதிப்பு இருக்கிறது. விரைவில் 7500 கோடிக்கு மேல் செல்லும் என்னும் எதிர்பார்ப்பு சந்தையில் இருக்கிறது. சிஎஸ்கேவின் தாய் நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸ் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 6500 கோடி என்னும் அளவிலே உள்ளது. ஆனால் சிஎஸ்கே விரைவில் இந்த நிலையை எட்டும் என எதிர்பார்ப்பதால் பல தொழிலதிபர்கள் புதிய அணியை வாங்குவதற்கு போட்டியிடுகிறார்கள்.
புதிய அணிகள் வருவதால் ஒட்டுமொத்த வீரர்களும் மாற்றி அமைக்கபட இருக்கிறார்கள். ஐபிஎல் 2022-க்கு புதிய மெகா ஏலம் நடக்க இருக்கிறது. ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 4 வீரர்களை ( 3 உள்நாட்டு வீரர்கள், 2 வெளிநாட்டு வீரர்கள், ஆனால் அதிகபட்சம் 4 மட்டுமே) தக்க வைத்துக்கொள்ள முடியும் என தெரிகிறது. மீதமுள்ள வீரர்கள் அனைவரும் ஏலம் மூலமே எடுத்துக்கொள்ள முடியும். மேலும் புதிதாக உருவாக்கப்படும் அணிகள் ஏலத்துக்கு முன்பாக சில வீரர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும் என தெரிகிறது.
புதிய அணிகள், வீரர்கள் ஏலம், மீடியா உரிமம் என ஐபிஎல் தொடர்பான செய்திகள் தொடரந்து வர இருக்கின்றன.