Repo Rate Changed: அப்படிபோடு..! 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ விகிதம் மாற்றம், குறையும் வட்டி, யாருக்கெல்லாம் பலன்?
Repo Rate Changed: ரிசர்வ் வங்கி 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதத்தில் திருத்தம் செய்து அறிவித்துள்ளது.

Repo Rate Changed: பணவியல் கொள்கை குறித்து அறிக்கை வெளியிட்ட ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, "நிதியியல் கொள்கை குழு ஒருமனதாக ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்துள்ளதாக” அறிவித்தார்.
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு:
அதன்படி, குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5% இலிருந்து 6.25% ஆக 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 11 முறை ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படாத நிலையில் இம்முறை வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த வட்டி விகிதக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சஞ்சய் மல்ஹோத்ரா ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பேற்ற பின்பு, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். அதோடு சஞ்சய் மல்ஹோத்ரா வெளியிட்டுள்ள அறிக்கை, ”2026 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இலக்கை 6.6% லிருந்து 6.7% ஆக உயர்த்தியுள்ளது.
பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் முயற்சி:
கடந்த சில காலமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி தடுமாறி வருகிறது. இதன் காரணமாக நுகர்வோர் செலவினங்களை ஊக்குவிக்கவும், பொருளாதாரம் மீண்டும் திறம்பட செயல்படவும், அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், ரூ.12 லட்சம் வரையிலான வருவாய்க்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே இந்த வட்டி விகிதக் குறைப்பு அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், பொதுமக்களிடையே பணப்புழக்கம் அதிகரித்து, வாங்கும் திறனும் உயரும். அதன் விளைவாக தேவை அதிகரித்து, உற்பத்தி பெருகி நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி நகரும் என்பதே அரசின் திட்டமாகும்.
யாருக்கு பலன்?
ரெப்போ வட்டி விகிதம் குறைவதால் வங்கிகளில் இருந்து வீட்டுக் கடன் மற்றும் கார் கடன் பெற்றவர்களுக்கான வட்டி விகிதம் குறையும். அவர்கள் செலுத்தும் தவணை தொகை குறையும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க, கடைசியாக கடந்த 2020ம் ஆண்டு மே மாதம், ரெப்போ வட்டி விகிதத்தில் 40 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டது.
ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன?
ரெப்போ விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அரசாங்கப் பத்திரங்களுக்கு ஈடாக வணிக வங்கிகளுக்கு குறுகிய கால நிதியை வழங்கும் வட்டி விகிதமாகும். அதன்படி, ரெப்போ விகிதத்தில் குறைப்பு என்பது ரிசர்வ் வங்கி குறைந்த வட்டி விகிதத்தில், பிற வங்கிகளுக்கு கடன் வழங்கும் என்பதாகும். இது கடன் வாங்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து குறைந்த வட்டி விகிதங்களை வசூலிக்க வங்கிகளுக்கு வாய்ப்பை வழங்குகிறது. இது பொருளாதாரத்தில் பண விநியோகத்தை அதிகரிக்கிறது, பணப்புழக்கத்தை வலுப்படுத்துகிறது, கடன் வாங்குவதை ஊக்குவிக்கிறது மற்றும் நுகர்வோர் தேவையை அதிகரிக்கிறது.





















