LOAN Tips: பேங்க்ல வாங்குன வீட்டு கடன கட்ட கூடுதல் அவகாசம் வேணுமா? வாய்ப்புகளும்.. செய்ய வேண்டியதும்..!
வங்கிகளில் வாங்கும் கடனை திருப்பி செலுத்த கூடுதல் அவகாசம் வாங்குவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
வங்கிகளில் வாங்கும் கடனை திருப்பி செலுத்த கூடுதல் அவகாசம் வாங்குவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
வங்கிக் கடன்:
அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காக பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் கடன் பெறுவது என்பது இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது. பொதுமக்களின் தேவைகளை உணர்ந்து தனிநபர் கடன், வீட்டு கடன், கார் கடன் என பல்வேறு பிரிவுகளில் வங்கிகள் கடன்களை வழங்கி வருகின்றன. வட்டியுடன் சேர்த்து ஒவ்வொரு மாதமும் செலுத்தும் சந்தாவை முறையாக செலுத்திவிட்டால், எந்த பிரச்னையும் இருக்காது.
ஒருவேளை மாத சந்தாவை முறையாக செலுத்தாவிட்டால், அபராதம் தொடங்கி சொத்துகள் பறிமுதல் வரை பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்நிலையில், வங்கிகளில் வாங்கும் வீட்டுக் கடனுக்கான மாத சந்தாவை குறிப்பிட்ட காலகட்டத்திற்கு செலுத்த முடியாது என்றால், அதற்கான அவகாசத்தை எப்படி பெறுவது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
வங்கிகளின் நடவடிக்கை:
வங்கிகளில் பெற்ற வீட்டு கடனுக்கான மாத சந்தாவை முறையாக செலுத்தி வந்தால் எந்த ஒரு பிரச்னையும் இருக்காது. ஒருவேளை 3 மாதங்களுக்கு தொடர்ந்து மாத சந்தாவை செலுத்த தவறினால் வங்கி தனது சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
- அதன்படி, வாடிக்கையாளரின் கடன் NPA எனப்படும் செயல்படாத சொத்து என்ற வரையறைக்குள் மாற்றப்படும்
- சிபில் பீரோவிற்கு புகாரளிக்கப்பட்டு கடன் பெற்றவர் தொடரபாக புகாரளிக்கப்படும். இதன் மூலம் அவரது சிபில் ஸ்கோர் குறைக்கப்பட்டு, பயனாளர் மற்ற வங்கிகள் கடன் பெறுவதற்கான வாய்ப்புகளை குறைக்கப்படும்
- சர்ஃபேசி (SARFAESI) விதியின் கீழ் வாடிக்கையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்
- இந்த நோட்டிஸ் பெற்ற 60 நாட்களுக்குள் வாடிக்கையாளர் நிலுவையில் உள்ள சந்தா தொகையை திருப்பி செலுத்த வேண்டும்
- தவறினால் எந்தவித முன்னறிவிப்பும், நீதிமன்ற உத்தரவுமின்றியே கடன் பெற்றவரின் சொத்துகளை பறிமுதல் செய்து ஏலத்தில் விற்று தங்களுக்கான கடன் தொகையை வங்கிகள் எடுத்துக்கொள்ளும்.
அவகாசம் பெறுவது எப்படி?
இந்த நடவடிக்கைகளை தடுக்க வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வேறு சில ஆப்ஷன்களை வழங்குகிறது. அதன்படி, கடன் பெறும் நபர்களுக்கு மொராட்டோரியம் பீரியட் என்ற ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதன் மூலம், குறிப்பிட்ட காலத்திற்கு கடனுக்கான மாத சந்தா செலுத்துவதில் இருந்து விலக்கு பெற்று, பின்பு மீண்டும் தனது கடன் தொகையை திருப்பி செலுத்தும் நடவடிக்கையை வாடிக்கையாளர் தொடரலாம்.
- கடன் பெற்ற நபர் நேரடியாக வங்கியை அணுகி தனது சூழலை எடுத்துரைத்து மாத சந்தாவை செலுத்துவதில் இருந்து சில மாதங்களுக்கு விலக்கு கோரலாம்
- வாடிக்கையாளர் சொல்லும் காரணம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அவரது கோரிக்கையின்படி சில மாதங்கள் மாத சந்தா செலுத்துவதில் இருந்து வங்கி விலக்கு அளிக்கும்
- அதேநேரம் மீண்டும் சந்தா தொகையை செலுத்த தொடங்கும் போது, கடனை கட்டி முடிப்பதற்கான காலம் என்பது அதிகரிக்கும்
- அதோடு மாத சந்தா தன்னால் செலுத்த முடியாத அளவிற்கு அதிகமாக இருப்பதாக உணர்ந்தாலும் வாடிக்கையாளர் வங்கியை அணுகலாம்
- வாடிக்கையாளரின் கோரிக்கையை ஏற்று சந்தா தொகையை குறைத்து, கடனை கட்டி முடிப்பதற்கான கால அவகாசத்தை வங்கி நிர்வாகம் உயர்த்தி கொடுக்கும்