Budget 2025 Income Tax: ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லையா? 10% வரியா? பட்ஜெட்டில் ட்விஸ்ட் வைத்த அமைச்சர் நிர்மலா!
புதிய வரி விதிப்பு முறையில் 8 முதல் 12 லட்ச ரூபாய் வரை ஆண்டு வருமானம் பெறுவோருக்கு 10 சதவீத வரி விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பாக 12 லட்ச ரூபாய் வரை ஆண்டு வருமானம் பெறும் தனி நபர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும் புதிய வரி விதிப்பு முறையில் 8 முதல் 12 லட்ச ரூபாய் வரை ஆண்டு வருமானம் பெறுவோருக்கு 10 சதவீத வரி விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரி விலக்கு உண்டா? இல்லை 10 சதவீத வரியா என்று கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு வரை 7 லட்ச ரூபாய் ஆண்டு வருமானம் பெறுவோருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. இந்த வரம்பு 12 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்துடன், ரூ. 75,000 நிலையான வரி விலக்குடன் சேர்த்து, இனி ஆண்டுக்கு ரூ.12.75 லட்சம் வரை வருமானம் ஈட்டும் நபர்கள், வருமான வரி கட்டத் தேவையில்லை
புதிய வரி விதிப்பு முறை சொல்வது என்ன?
ரூ.4 முதல் 8 லட்சம் - 5% வரி
ரூ.8 முதல் 12 லட்சம் - 10%
ரூ.12 - 16 லட்சம் - 15%
ரூ.16 - 20 லட்சம் - 20%
ரூ.20 - 24 லட்சம் - 25%
ரூ.24 லட்சத்துக்குக் கூடுதலாக - 30% வரி விதிக்கப்படும்.
இதில் ரூ.8 முதல் ரூ.12 லட்சம் வரை வாங்குவோருக்கு 10 சதவித வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 12 லட்ச ரூபாய் சம்பாதிப்பவர்கள் அதில் 10 சதவீதம் 1.2 லட்சம் தொகையை வரியாக செலுத்தத் தேவையில்லை.
80 ஆயிரம் ரூபாய் வரை வரி விலக்கு
4 முதல் 8 லட்சம் வரை 5 சதவீதம் வரி எனில் 4 லட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் என 20 ஆயிரம் ரூபாய் வரி விதிக்கப்படும். 8 முதல் 12 லட்சம் ரூபாய்க்கு 10 சதவீத வரி எனில் 40 ஆயிரம் ரூபாய் வரி விதிக்கப்படும். ஆக மொத்தத்தில் 12 லட்சம் ரூபாய் சம்பாதிப்பவர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் வரி விதிக்கப்படும். எனினும் அரசு 80 ஆயிரம் ரூபாய் வரி தள்ளுபடி அளித்துள்ளது. அதாவது உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து, அதிகபட்சம் 80 ஆயிரம் ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம். இதன் காரணமாகவே 12 லட்ச ரூபாய் வரை வரி விதிப்பு இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
மேலும், மூத்த குடிமக்களுக்கான வட்டி மீதான, வரி விலக்கு உச்சவரம்பு ரூ.50,000-த்தில் இருந்து 1 லட்சம் ரூபாயாக இரட்டிப்பு ஆக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

