(Source: ECI/ABP News/ABP Majha)
Budget 2024 Cheaper and Costly: மத்திய பட்ஜெட்; விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள் என்னென்ன?- முழு பட்டியல் இதோ!
Union Budget 2024 Cheaper and Costly: மத்திய பட்ஜெட்டில் நிறைய பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது; உயர்த்தப்பட்டுள்ளது. அதன் பட்டியலைக் காணலாம்.
2024- 25ஆம் நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த நிலையில், நிறைய பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது; உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சம்பந்தப்பட்ட பொருட்களின் விலை முறையே குறையவும், அதிகரிக்கவும் உள்ளது. அதன் பட்டியலைக் காணலாம்.
பொதுவாக மத்திய அரசின் முழு பட்ஜெட்டானது, பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்படும். ஆனால், இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக, புதிய அரசு அமையும் வரையிலான காலம் வரையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
முழு ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல்
தேர்தல் முடிவடைந்து, பாஜக தலைமையிலான பாஜக கூட்டணி பொறுப்பேற்றுள்ள நிலையில், தற்போது முழு ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இது பிரதமர் மோடி தலைமையில், 3வது ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்டாகும். இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 7வது முழு பட்ஜெட் ஆகும்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தின் மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது, நிறைய பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது; உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது.
விலை குறையும் பொருட்கள்
- மொபைல் போன்கள், சார்ஜர்கள் மற்றும் பிற உபகரணங்கள்
- தங்கம், வெள்ளி, பிளாட்டினம் நகைகள்
- ஃபெர்ரோ நிக்கிள் மற்று பிளிஸ்டர் காப்பர்
- 3 கேன்சர் மருந்துகள்
- 25 முக்கிய கனிமங்கள்
- சோலார் பேனல்கள்
- லெதர் பொருட்கள்
- இறால், மீன்
- காலணிகள், மின்னணு பொருட்கள்
என்ன காரணம்?
மொபைல் போன்கள், சார்ஜர்கள் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி ஆகியவற்றுக்கான சுங்க வரி 6 சதவீதமாகவும் பிளாட்டினத்துக்கான வரி 6.4 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் சிகிச்சைக்கான 3 மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஃபெர்ரோ நிக்கிள் மற்று பிளிஸ்டர் காப்பர் உலோகங்களுக்கு அடிப்படை சுங்க வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
சோலார் பேனல்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் மூலதனப்பொருட்களின் விலை குறைக்கப்பட உள்ளது. 25 முக்கிய கனிமங்கள் மீதான சுங்க வரிக்கு முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது. இறால் மற்றும் மீன் தீவனங்களுக்கான வரி 5% ஆகக் குறைக்கப்படுகிறது. லெதர் பொருட்கள் மீதான வரியும் குறைக்கப்பட்டு உள்ளது.
விலை உயரப் போகும் பொருட்கள்
- தொலைத்தொடர்பு உபகரணங்கள் (குறிப்பிட்ட தொலைத்தொடர்பு உபகரணங்களுக்கு 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது)
- பிவிசி பிளாஸ்டிக் பொருட்கள் (சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது)
- சிகரெட்டுகள்
- வான்வழிப் பயணம்