Budget 2024: கடன் வாங்கி வீடு வாங்க இது சரியான நேரமா? ரியல் எஸ்டேட் துறையின் எதிர்பார்ப்பு என்ன?
Real Estate Budget: மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், ரியல் எஸ்டேட் துறையின் எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
இந்தியாவின் ரியல் எஸ்டேட் சந்தை சமீப காலமாக பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது. தொலைத்தொடர்பு, வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற சேவைத் துறைகளின் வேகமான வளர்ச்சியும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கு தேவையும் வணிக ரியல் எஸ்டேட்டுக்கான அதிக தேவையை உருவாக்கியுள்ளது.
அசுர வளர்ச்சி அடைந்த ரியல் எஸ்டேட்: குறிப்பாக, இரண்டாம் நிலை நகரங்களிலும் மூன்றாம் நிலை நகரங்களிலும் வர்த்தக ரியல் எஸ்டேட்-க்கு தேவை அதிகரித்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், தங்கும் விடுதி மற்றும் சில்லறை வணிகத் தொழில்களும் கணிசமாக வளர்ந்து வருகின்றன. இதனால், நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முக்கியமான உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது
2023 நிதியாண்டில், இந்தியாவில் வீட்டு வசதி துறை சிறப்பான வளர்ச்சியை கண்டது. அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 48 சதவீதம் அதிகரித்து, வீட்டு விற்பனை ரூ.3.47 லட்சம் கோடியை ($42 பில்லியன்) எட்டியுள்ளது. நடப்பு நிதியாண்டில் மொத்தம் 3,79,095 வீடுகள் விற்பனை செய்யப்பட்டது. கடந்த நிதியாண்டை விட 36 சதவீதம் அதிகமாகும்.
2023ஆம் ஆண்டு, ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான இடைப்பட்ட காலத்தில், இடத்தை குத்தகைக்கு எடுப்பது ஒவ்வொரு மாதமும் 130 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம், 1.5 மில்லியன் சதுர அடி நிலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்ப்புகள் என்னென்ன? இப்படிப்பட்ட சூழலில், மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து மோடி தலைமையிலான பாஜக அரசு, தனது முழு பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் மத்திய நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஏழாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
இந்திய ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், அதன் முன்னேற்றத்தைத் தடுக்க பல சவால்கள் இருக்கின்றன என்றும் அதை போக்க கவனம் தேவைப்படுகிறது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். கட்டுமான பொருள்களுக்கு விதிக்கப்படும் வரி 28 சதவீதமாக உயர்ந்துள்ளது. கட்டுமான பணிகள் மீதான வரி 18 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால், மனையில் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், 1,000 பேருக்கு மூன்று வீடுகள் மட்டுமே கட்டப்படுகின்றன. ஆனால், 1,000 நபர்களுக்கு ஐந்து வீடுகளை கட்ட தேவை உள்ளது. நகரங்களில் சுமார் 10 மில்லியன் வீடுகளுக்கு பற்றாக்குறை உருவாகியுள்ளது. பெருகிவரும் நகர்ப்புற மக்கள்தொகைக்கு ஏற்ப, 2030க்குள் கூடுதலாக 25 மில்லியன் விலை வீடுகள் கட்டப்பட வேண்டும்.