Income Tax:10 ஆண்டுகளில் வருமான வரியில் இவ்வளவு மாற்றமா? ஷாக் அளிக்கும் மத்திய அரசு பட்ஜெட் விவரங்கள்
Income Tax: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் வருமான வரியில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
Income Tax: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கீழ் வெளியிடப்பட ஆச்சரியம், தரும் அறிவிப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
கடந்த 10 ஆண்டுகால பட்ஜெட்:
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில், கடந்த 10 ஆண்டுகளில் வருமான வரி உள்ளிட்ட பல்வேறு வரி முறைகளை சீரமைக்கவும், வரி செலுத்துவதை ஊக்குவிக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் என கூறி பல கொள்கை மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றின் விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
பட்ஜெட் 2014-15:
2014-15 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி நனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. மேலும், மூத்த குடிமக்களுக்கு இந்த உச்சவரம்பு ரூ. 2.5 லட்சத்தில் இருந்து ரூ. 3 லட்சமாக மாற்றப்பட்டது. அதே பட்ஜெட்டில், வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் முதலீட்டு வரம்பு ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. வீட்டுக் கடனுக்கான வட்டி விலக்கு வரம்பு ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டது.
பட்ஜெட் 2015-16:
2015-16 பட்ஜெட்டில், பிரிவு 80D இன் கீழ் சுகாதார காப்பீட்டு பிரீமிய வரம்பு ரூ. 15,000 முதல் ரூ. 25,000 ஆக உயர்த்தப்பட்டது. மூத்த குடிமக்களுக்கு இந்த வரம்பு ரூ. 30 ஆயிரமாக மாற்றப்பட்டது. அதே ஆண்டில் தங்கத்தை பணமாக்குதல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், மக்கள் தங்களுடைய தங்கத்தை வங்கியில் வைப்பதன் மூலம் வட்டி பெறலாம்.
பட்ஜெட் 2016-17:
2016-17 நிதியாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரில், வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) பணத்தில் 40% வரி விலக்கு அளிக்கப்பட்டது. வீட்டுக் கடனுக்கு, பிரிவு 24ன் கீழ் ரூ. 50,000 வரை கூடுதல் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தகராறு தீர்க்கும் திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதனால், சிறு வரி தகராறுகளைத் தீர்ப்பது எளிதாகிவிட்டது.
2017-18 பட்ஜெட்:
2017-18 நிதியாண்டு பட்ஜெட்டில் பல்வேறு மறைமுக வரிகளை ஒருங்கிணைக்கும் ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) நாட்டில் அமல்படுத்தப்பட்டது. ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையிலான வருமானம் மீதான வரி விகிதம் 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.
பட்ஜெட் 2018-19:
இந்த பட்ஜெட்டில் ரூ. 40,000 நிலையான விலக்காக அறிவிக்கப்பட்டது. இது சம்பளம் பெறும் வரி செலுத்துவோருக்கு மிகுந்த நிம்மதியை அளித்தது. அதே பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கான வட்டி வருமான விலக்கு வரம்பு ரூ. 10,000 முதல் ரூ. 50,000 உயர்த்தப்பட்டுள்ளது.
2019-20 பட்ஜெட்:
இந்த பட்ஜெட்டில் வருமான வரிச் சட்டத்தின் 87A பிரிவின் கீழ் ரூ. 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு முழு வரி விலக்கு அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான வரிச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டன. இதனால் புதிய நிறுவனங்களுக்கு மூன்றாண்டுகளுக்கு 100 சதவீத வரிவிலக்கு அளிக்கப்பட்டது. குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டது.
2020-21 பட்ஜெட்:
இந்த பட்ஜெட்டில் பழைய வரி விதிப்பு முறைக்கு மாற்றாக புதிய வரி விதிப்பு முறை அறிவிக்கப்பட்டது. இது குறைந்த வரி விகிதங்களைக் கொண்டிருந்தாலும், விலக்குகள் மற்றும் கழிவுகளை கொண்டிருக்கவில்லை. ரூ. 2.5 லட்சம் வரையிலான வருமானத்தில் 0%, ரூ. 2.5-5 லட்சம் 5%, ரூ. 5-7.5 லட்சம் 10%, ரூ. 7.5-10 லட்சம் 15%, ரூ. 10-12.5 லட்சம் 20%, ரூ. 25% 12.5-15 லட்சம், ரூ. 15 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் 30% வரி விதிக்கப்படுகிறது.
பட்ஜெட் 2021-22
இந்த பட்ஜெட்டில், ஓய்வூதியம் மற்றும் வட்டி வருமானம் மட்டுமே பெறும் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
2022-23 பட்ஜெட்டில்:
மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகள் ( கிரிப்டோகரன்சி , பிற மெய்நிகர் சொத்துகள்) மீது 30 சதவீத வரி அறிவிக்கப்பட்டது. டிஜிட்டல் சொத்துகளை மாற்றும்போது 1% டிடிஎஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கான கூடுதல் கட்டணம் 15% ஆக குறைக்கப்பட்டது.