Budget 2023 Millets : மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டு பேசிய சிறுதானியங்கள்.. ஏன் முக்கியத்துவம்?
Say hello to millets : சிறுதானியங்களின் நன்மைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்தும், நாட்டு மக்கள் அனைவரும் உணவில் சிறுதானியங்களை அதிகம் சேர்த்து கொள்வது பற்றியும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
2023-2024ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று (பிப்ரவரி,1,2023) தாக்கல் செய்யப்பட்டது. வருமான வரி உச்சவரம்பில் மாற்றம், வேளாண் துறைக்கு கடன் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு, தனி நபர் வருமான வரி விலக்கு, உணவு தானிய விநியோகம், நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு ஆகிவயவைகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
நடப்பு ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி, 31-ஆம் தேதி) தொடங்கியது. நாடாளுமன்றத்தின் மரபுப்படி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். இந்த உரை முடிந்ததும் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கூட்டத்தொடரின் முதல் அமர்வு அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாவது அமர்வானது மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம்:
காலை 11 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கிய நிதியமைச்சர் நிர்மலாம் சீதாராமன், முதல் அரை மணி நேர உரையில் சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்தும் அதிலுள்ள பயன்கள் குறித்தும் பேசினார்.
நாட்டின் வளச்சிக்கான திட்டங்கள் குறித்து பேசுகையில், ’அம்ரித் கால்’ அதாவது அடுத்த 25 ஆண்டுகளுக்கான தனித்துவமான திட்டமாக இதைக் குறிப்பிடுகிறார். நாட்டின் நல்ல காலம் தொடங்கும் இவ்வேளையில், அனைவரும் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது என்று நிர்மலா தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
உடலுக்கு வலிமை சேர்க்கும் சிறுதானியங்கள் நம் பாரம்பரியத்தின் அடையாளமாக திகழ்கிறது. உலக அளவில் இந்தியா, சிறுதானியங்கள் உற்பத்தி மையமாக தொடர்வதற்கான நடவடிக்கைகளை அரசு ஊக்குவித்து வருபவதாகவும், சிறுதானியங்கள் ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக இருப்பதாகவும் நிர்மலா தெரிவித்தார். மேலும், சிறுதானியங்களை உற்பத்தி செய்வதில் உலகிலேயே இந்தியா முன்னணியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பரிந்துரைத்த சிறுதானியங்களின் நன்மைகளைக் கீழே காணலாம்.
குடல் ஆரோக்கியம் :
சிறுதானியங்களில் பொட்டசியம் சத்து மிகுந்து காணப்படுகிறது. சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. இதில் அதிக ஃபைபர் சத்து இருப்பதால், அடிக்கடி பசி உணர்வு எழாமல் இருக்கும். செரிமான மண்டலம் சீராக இயங்க உதவுகிறது.
மூளை ஆரோக்கியம்
இதில் உள்ள பொட்டாசியம் மூளை சீராக இயங்கவதற்கும், உடலிலுள்ள மற்ற பாகங்களுக்கு தகவல்களை எடுத்துச் செல்ல உதவும் செல்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
கெட்ட கொழுப்பிறகு குட் பை:
மாறிவரும் உணவு முறையினால், எடை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை நாம் சந்தித்து வருகிறோம். சிறுதானியங்களில் உள்ள வைட்டமின் ஏ, பி, பாஸ்பரஸ், ஆன்டி - ஆக்ஸிடன்ட், நியாசின், கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து ஆகியவை உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகின்றன. உடலில் கெட்ட கொழுப்பு சேராமல் பாதுகாக்கிறது.
இரத்தத்தில் சீரான சர்க்கரை அளவிற்கு..
இதில் குறைந்த க்ளைகமிக் இன்டெக்ஸ் (glycemic index) இருபத்தால் சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
இன்றைய காலத்தில் சந்தையில் சிறுதானியங்கள் கொண்டு தயாரிக்கப்படும் பிஸ்கட், கேக், முறுக்கு உள்ளிட்ட ஸ்நாக்ஸ் வகைகளும், சிறுதானியங்கள் கொண்டு தயாரிக்கப்படும் இட்லி, தோசை, உப்புமா, ஆகியவைகளும் கிடைக்கின்றன. அரிசி எடுத்துகொள்வது போல, கம்பு, கேழ்வரகு, தினை, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்களையும் உணவில் சேர்த்துகொள்வது உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும்.