Budget 2024: இந்த முறையாவது கருணை காட்டுவார்களா? வருமான வரி செலுத்துவோரின் ஏக்கமும் கோபமும்!
மத்திய அரசு பட்ஜெட் நாளை தாக்கல் செய்ய உள்ள நிலையில், நடப்பு நிதியாண்டிலாவது வருமான வரி குறைக்கப்படுமா? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட் வரும்போதெல்லாம் வருமான வரி வரம்பு உயர்த்தப்படுமா? வரி குறையுமா? போன்ற எதிர்பார்ப்புகளுக்கு குறைவே இருக்காது. ஆனால், என்ன சாபமோ தெரியவில்லை. வருமான வரி செலுத்துவோருக்கு மட்டும் பெரிய அளவுக்கு அரசின் சலுகைகள் கிட்டுவதே இல்லை என்பதுதான் கண்கூடு.
நாட்டின் குடிமகன்கள் அனைவரும் ஏதேனும் ஒரு வகையில், இந்த வரி, அந்த வரி என ஏதோ ஒரு பெயரில் வரி கட்டி வருகிறோம்.
வருமான வரி:
ஆனால், மற்றவர்கள் கட்டும் வரிகள் மட்டுமல்ல, தாம் சம்பாதிக்கும் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு சொல்லும் வகையில், அரசுக்கு வருமான வரி என்ற பெயரில் கூடுதலாக வரி கட்டுபவர்கள் யாரென்றால், அவர்கள்தான் மாத சம்பளதாரர்கள். ஒவ்வொருவரின் ஊதியத்திற்கு ஏற்ப, அவரவருக்கு வரி விதிக்கப்படுகிறது.
தம்முடைய உழைப்பிற்கு அரசுக்கு வரி கட்டுகிறார்கள்.
இத்தனைக்கும் அவர்களுக்கு எந்தவித சலுகைகளையும் அரசு கொடுப்பதில்லை. ஆனால், வரி மட்டும், தம்முடைய உழைப்பிற்கு, ஊதியதாரர்கள் செலுத்த வேண்டும் என்பதுதான் இந்த நாட்டின் விதி. அதிலும், ஊதியம் ஏற, ஏற, அவர்களின் வரி விகிதமும் ஏறிக் கொண்டே இருக்கும். தாம் கஷ்டப்பட்டு, மூளையை, உடல் உழைப்பை செலுத்தி செய்யும் பணிக்கு, வருமான வரி என்ற பெயரில் அரசுக்கு நிதியை கொடுக்கிறோம்.
மக்கள் நல்வாழ்வு திட்டங்கள்:
மத்திய அரசின் கடந்த ஆண்டு அறிக்கையின்படி, இந்திய மக்கள் தொகையான 140 கோடியில், சம்பாதிப்பவர்கள் எவ்வளவு பேர் என்பது குறித்த தகவல் இல்லை. ஆனால், மாத ஊதியதாரர்களில் 8 கோடியே 61 லட்சம் பேர் வருமான வரி படிவம் தாக்கல் செய்துள்ளனர். இந்த நேரடி வரியின் மூலம், மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் கிட்டத்தட்ட 25 முதல் 27 சதவீதம் கிடைக்கிறது எனத் தெரிகிறது. கிட்டத்தட்ட மத்திய அரசின் நிதியில், கால் சதவீதம் வருமான வரி தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசின் நலத்திட்டங்களுக்கு பலம் சேர்க்கும் வகையில், வருமான வரி செலுத்தும் ஊதியதாரர்களுக்கு, ஏதேனும் அரசு சிறப்பு சலுகைகளைத் தருகிறதா என்றால் இல்லை. ஆனால், மேற்கத்திய நாடுகளில் பொதுவாக, அரசுக்கு வரி செலுத்துவோருக்கு, டிக்கெட் பதிவில் முன்னுரிமை, மருத்துவ சேவையில் முன்னுரிமை என பல்வேறு சலுகைகள் நாடுகளுக்கு ஏற்ப தரப்படுகிறது. ஆனால், இந்தியாவில் வரி செலுத்துவோருக்கு என்ன சலுகைகள் என்றால், மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் என்ற பெயரில் தேவைப்படுவோருக்கு பொதுவாக வழங்கப்படுகிறது.
ஏதேனும் அதிசயம் நடக்குமா?
ஆனால், வருமான வரிச் செலுத்தும் மாத ஊதியதாரர்களுக்கு, வரி செலுத்துகிறோம் என்பதாலேயே, பல்வேறு சலுகைகள், குறிப்பாக, வெள்ள நிவாரணம் உள்ளிட்ட அரசின் பல நிதி உதவிகள் தரப்படுவதில்லை என்பதுதான் கசப்பான யதார்த்தம். இதுமட்டுமல்ல, பல ஆண்டுகளாக, வருமான வரிச் செலுத்துவோருக்கு, நிதி இல்லாத பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என தொடர்ந்து மத்தியில் ஆட்சி செய்வோர் சொல்லி வருகின்றனர். குறிப்பாக, ரயில் டிக்கெட், விமான டிக்கெட் பதிவுகளின் போது முன்னுரிமை கொடுக்கப்படும் போன்ற பல சலுகைகள் குறித்தெல்லாம் பேசப்பட்டது. ஆனால், இதுவரை எந்தவித பலனும் கிடைக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.
ஓர் உதாரணத்திற்கு ஆண்டுக்கு 15 லட்சத்திற்கு மேல் சம்பாதிப்பவர்கள், அவர்கள் வருவாயில், 30 சதவீதத்தை அரசுக்கு வருமான வரித் தருகிறோம் எந்தவித பலனும் இல்லாமல் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு அரசு என்ன தருகிறது என்ற கேள்வி பல ஆண்டுகளாக இருக்கிறது. எனவே, இந்த ஆண்டாவது மத்திய பட்ஜெட்டில், வருமான வரி செலுத்துவோருக்கு சின்னச் சின்ன சலுகைகளாவது தரப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது அல்லது வருமான வரியை குறைத்தாவது அறிவிப்பு வரும் என்ற ஆசையும் இருக்கிறது. எது நடக்கும் என்பது மத்திய நிதி அமைச்சருக்கும் பிரதமருக்கும் மட்டுமே தெரியும். மாத ஊதியதாரர்களின் எதிர்பார்ப்பு கைக்கூடுமா? வழக்கம்போல் காத்திருப்போம்.