Budget 2023: கழிவுநீர் அகற்றும் பணிகளில் மனிதர்களுக்கு பதில் 100% இயந்திரங்களை பயன்படுத்த முடிவு - மத்திய நிதி அமைச்சர்
2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.
2023-24-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.
இதில் பல்வேறு துறைகளுக்கு, எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் தெரிவித்தார். அப்போது அவர், கழிவுநீர் அகற்றும் பணியில் இனி மனிதர்களுக்கு பதில் 100% இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால் பட்ஜெட்டில் இயந்திரங்கள் வாங்கவோ அல்லது உற்பத்தி செய்யவோ நிதி ஒதுக்கப்படுவதாக அவர் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
”மேன்ஹோல் டு மெஷின் மோடு" என்று குறிப்பிட்ட நிதியமைச்சர், நாடு முழுவதும் உள்ள சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகள் இயந்திர செயல்முறை மூலம் கழிவுகளை அகற்ற அரசு முடிவெடுத்துள்ளது என்று அறிவித்தார்.
"அனைத்து நகரங்களும் நகரங்களும் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை மேன்ஹோலில் இருந்து மெஷின் ஹோல் முறையில் 100 சதவீதம் மாற்றும் வகையில் செயல்படுத்தப்படும்," என்று அவர் கூறினார்.
கையால் துப்புரவு என்ற பணிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்துடன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
கடந்த ஆண்டு டிசம்பரில், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, 2017-ம் ஆண்டு முதல் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது 400 பேர் உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டைப் போலவே, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2023-2024க்கான மத்திய பட்ஜெட்டை காகிதமில்லாத வடிவத்தில் தாக்கல் செய்தார்.
நிர்மலா சீதாராம் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றத்திற்குச் செல்லும் போது, தேசிய சின்னம் பொறிக்கப்பட்ட பாரம்பரிய பாஹி-கட்டா பாணி பையில் சுற்றப்பட்ட டிஜிட்டல் டேப்லெட்டை எடுத்துச் சென்றார்.
சீதாராமன் 2019 ஆம் ஆண்டு நிதியமைச்சகராக பொறுப்பேற்ற பின்னர் இது ஐந்தாவது பட்ஜெட் தாக்கல் ஆகும்.
முக்கிய அம்சங்கள் சில:
- அடுத்த ஓராண்டுக்கு 80 கோடி குடும்பங்களுக்கு இலவச உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கும்
- பெண்கள், பட்டியலின, பழங்குடியின, இளைஞர்கள் நலனை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
- உணவு தானிய விநியோகத்திற்கு 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- 7 முக்கிய அம்சங்களுடன் வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
- ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைக்கோடி மனிதருக்கும் சேவை, உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு, பசுமை வளர்ச்சி, இளைஞர் நலன் உள்ளிட்ட 7 அம்சங்களுக்கு முக்கியத்துவம்
- பா.ஜ.க. ஆட்சியில் இந்திய பொருளாதாரம் 10வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
- நாடு முழுவதும் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் உருவாக்கப்படும்.
- மருத்துவ துறையில் ஆய்வுகளை ஊக்குவிப்பதற்கு புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்
- தேசிய டிஜிட்டல் நூலகம் மேம்படுத்தப்படும்.
- கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பை குறைப்பதற்காக நாடு முழுவதும் பிராந்திய மற்றும் ஆங்கில மொழிகளில் டிஜிட்டல் நூலகங்கள் அமைக்கப்படும்
- 2047ம் ஆண்டில் இந்தியாவில் 0-40 வயது வரையிலான மக்களுக்கு ரத்த சோகையை முற்றிலும ஒழிக்கும் திட்டங்கள் அமல்படுத்தப்படும்
- பழங்குடியின மக்கள் வசிக்கும் ஏகலைவா மாதிரிப் பள்ளிகளில் அடுத்த 3 ஆண்டுகளில் 38 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
- ஏகலைவா பள்ளியில் ஆசிரியர்கள் நியமனம் மூலம் 3.5 லட்சம் பழங்குடியின மாணவர்கள் பயனடைவார்கள்.
- அரசு ஊழியர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்வதற்காக இணையதளம் மூலம் கற்பிக்கும் கர்மயோகி திட்டம்
- நகர்ப்புற வளர்ச்சிக்கு ரூபாய் 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
- கழிவு நீர் அகற்றும் பணியில் மனிதர்களை பயன்படுத்துவதற்கு பதில் 100 சதவீத இயந்திரங்களை பயன்படுத்த முடிவு
- திணை உற்பத்தியில் இந்தியா 2வது மிகப்பெரிய ஏற்றுமதியாளராக திகழ்கிறது.
- அனைத்து அரசு சேவைகளுக்கும் அடையாள ஆவணமாக பான் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தலாம்
- ரூபாய் 700 கோடி ரூபாய் மதிப்பில் ஆன்லைன் நீதிமன்றங்கள் உருவாக்கப்படும்.