Ashneer Grover Resigns: நிதி முறைகேடு புகார் எதிரொலி... பாரத் பே நிறுவனத்தின் அஷ்னீர் கோரோவர் ராஜினாமா
பாரத் பே நிறுவனத்தின் இயக்குநர் பதவியிலிருந்து அஷ்னீர் கோரோவர் விலகியுள்ளார்.
இந்தியாவில் நிதி சேவைகள் தொடர்பான விஷயங்களை அளித்து வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று பாரத் பே. இந்த நிறுவனத்தில் கடந்த சில மாதங்களாக பிரச்னை இருந்து வந்தது. இந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான அஷ்னீர் கோரோவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவர் நிதி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாரத் பே நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக அஷ்னீர் கோரோவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “பாரத் பே நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து உடனடியாக நான் பதவி விலகுகிறேன். அத்துடன் இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் பதவியிலிருந்தும் நான் விலகுகிறேன். எனினும் இந்த நிறுவனத்தின் பங்குதாரராக தொடர்ந்து நீடிப்பேன். நிதி சேவைகள் தொடர்பான விஷயங்களில் இந்த நிறுவனத்தை உலகளவில் மிகப்பெரிய நிறுவனமாக உருவாக்கியுள்ளோம்.
எனினும் 2022ஆம் ஆண்டு தொடக்கம் முதல் என் மீது தேவையில்லாமல் சில ஆதாரமற்ற புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. என்னுடை நற்பெயர் மற்றும் நிறுவனத்தின் நற்பெயர் ஆகிய இரண்டிற்கும் கலங்கம் கற்பிக்கும் வகையில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதனால் இளைஞர்களுக்கு தொழில்துறையில் முன்னுதாரணமாக இருந்த நான் தற்போது என்னுடைய நிறுவனத்தின் முதலீட்டாளர்களுடன் ஒரு சட்ட போராட்டத்தை நடத்தி வருகிறேன்” என உணர்ச்சி போங்க தெரிவித்துள்ளார்.
பாரத் பே நிறுவனத்தில் சுமார் 50 கோடி வரை நிதி முறைக்கேடு செய்ததாக அஷ்னீர் கோரோவர் மீது புகார் எழுந்தது. இதனால் இது தொடர்பாக விசாரிக்க வெளியே இருந்து சிறப்பு கணக்கு தனிக்கையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இந்த விவகாரத்தை விசாரிக்க முடியாது என்று அஷ்னீர் கோரோவர் தீர்ப்பாயத்திடம் ஒரு மனுவை தொடர்ந்திருந்தார். அதில், இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களின் ஒப்பந்தப்படி இந்தப் புகாரை விசாரிக்க நிறுவனத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறியிருந்தார். எனினும் அவரின் இந்த மனுவை தீர்ப்பாயம் நேற்று தள்ளுபடி செய்தது. ஏற்கெனவே இந்த புகார் எழுந்த உடன் ஜனவரி மாதம் முதல் 2 மாதங்கள் அஷ்னீர் கோரோவருக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் தற்போது அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்