Akshaya Tritiya 2024: அட்சய திரிதியை நாளில் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை - சவரனுக்கு ரூ.360 உயர்வு
பொதுவாக மற்ற நாட்களை காட்டிலும் அட்சய திரிதியை நாளில் நகைக்கடைகளில் மக்கள் ஆபரணங்கள் வாங்க அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
அட்சய திரிதியை நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது.
பொதுவாக நகைகள் மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வமே தனி தான். தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் என விதவிதமாக ஆபரணங்கள் வாங்குவார்கள். இதனால் நகைக்கடைகள் எப்போதும் வாடிக்கையாளர்களால் நிரம்பும். அதேசமயம் மற்ற நாட்களை காட்டிலும் அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க மக்கள் போட்டி போடுவார்கள். அதற்கு காரணம் இந்த நன்னாளில் நாம் ஆபரணங்கள் வாங்கினால் அது ஆண்டு முழுவதும் வாழ்க்கை செழிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.
அதன்படி 2024 ஆம் ஆண்டு அட்சய திரிதியை நாள் இன்று (மே 10) அதிகாலை 4.17 மணிக்கு தொடங்கி நாளை (மே 11) மதியம் 2.50 மணி வரை உள்ளது. அதேசமயம் இந்த இரு நாட்களிலும் நகைகள் வாங்க நல்ல நேரம் காலை 5.45 மணி முதல் மதியம் 12.06 வரை குறிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நகைகள் வாங்க முடியாதவர்கள் இந்த நாளின் பிற நேரங்களில் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்சய திரிதியை நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகள் அதிகாலையில் திறக்கப்பட்டன. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு அதிரடி ஆஃபர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களும் இன்று காலை முதல் நகைகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்படியான நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி 22 காரட் மதிப்பு கொண்ட தங்கம் சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53,280 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் விலை ரூ.45 உயர்ந்து ரூ.6,660 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து ரூ.90 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் கொண்ட தங்கம் விலை கிராம் ரூ.7,130 ஆகவும், சவரன் ரூ.57,040 ஆகவும் விற்பனையாகிறது.
அட்சய திரிதியை நாளில் நகைக்கடைகளில் மக்கள் ஆபரணங்கள் வாங்க அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்ற நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில், இன்றைய நாளில் உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.