Adani Share Market: அதானி - ஹிண்டன்பெர்க் வழக்கில் தீர்ப்பு - கிடுகிடுவென உயர்ந்த அதானி குழும பங்குகளின் விலை.. விவரம் இதோ
Adani Share Market: ஹிண்டன்பெர்க் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து பங்குச் சந்தையில், அதானி குழும பங்குகளின் மதிப்பு கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
Adani Share Market: ஹிண்டன்பெர்க் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து பங்குச் சந்தையில், அதானி குழும பங்குகளின் மதிப்பு 3 முதல் 18 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.
அதானி - ஹிண்டன்பெர்க் விவகாரம்:
அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக ஹிண்டன்பெர்க் நிறுவனம் கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டு இருந்தது. இதனால், இந்திய பங்குச்சந்தையில் அந்த குழுமம் கடும் சரிவை கண்டது. அக்குழமத்தில் உள்ள நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு பல மடங்கு சரிய, பங்குகளின் விற்பனையும் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், ஹிண்டன்பெர்க் நிறுவனம் கூறியதை போன்று எந்த மோசடியிலும் ஈடுபடவில்லை என அதானியே வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்தார். இதனிடையே, அதானி குழுமம் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர்,
உச்சநீதிமன்ற தீர்ப்பு:
அதானி குழுமம் தொடர்பான மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில், “அதானி குழுமம் மீதான முறைகேடு புகார் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க தேவையில்லை. அதானி குழுமம் மீதான முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்த செபி அமைப்புக்கு அதிகாரம் உள்ளது. 3 மாதங்களில் இதுதொடர்பான விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும். ஹிண்டன்பெர்க் அறிக்கை தொடர்பாக நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரைகள் அடிப்படையில் மத்திய அரசும், செபியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிபுணர் குழு அறிக்கையை ஆய்வு செய்து இந்திய முதலீட்டாளர்களின் நலனை உறுதி செய்ய வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது.
கிடுகிடுவென உயர்ந்த அதானி குழும பங்குகள்:
உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியானதுமே அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு கிடுகிடுவெப்ன உயர்ந்துள்ளது. 3 முதல் 18 சதவிகிதம் வரையில் அந்நிறுவனங்களின் பங்குகள் உயர்வை சந்தித்துள்ளன. இதன் மூலம் அந்த குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு 15 லட்சம் கோடி ரூபாயை நோக்கி உயர்ந்துகொண்டுள்ளது. அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமாக அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 9 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதேநேரம், அதானி போர்ட்ஸ் நிறுவன பங்குகள் 6 சதவிகிதம் அதிகரித்து, 52 வாரங்களில் இல்லாத அளவிற்கு ஆயிரத்து 144 ரூபாயாக உச்சம் தொட்டுள்ளது. அதானி பவர் நிறுவனம் 5 சதவிகித ஏற்றம் காண, அதிகபட்சமாக அதானி எனெர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவன பங்குகளின் மதிப்பு 18 சதவிகிதம் ஏற்றம் கண்டுள்ளது. அதானி கேஸ் நிறுவன பங்குகள் 10 சதவிகிதமும், அதானி கிரீன் எனர்ஜி 9 சதவிகிதமும், அதானி வில்மர் 9 சதவிகிதமும் ஏற்றம் கண்டுள்ளது. என்டிடிவி நிறுவன பங்குகளின் மதிப்பு 11 சதவிகிதமும், அம்புஜா சிமெண்ட் நிறுவன பங்குகளின் மதிப்பு 3 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.