(Source: ECI/ABP News/ABP Majha)
FM Nirmala Sitharaman: அதானி குழுமத்தில் முதலீடு செய்த எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. பங்குகள் - முதன்முறையாக பதிலளித்த நிர்மலா சீதாராமன்
ஒரு சம்பவம், இந்திய நிதிச் சந்தைகள் எப்படி செயல்படுகின்றன என்பதை குறிக்க போவதில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
உலகின் டாப் 3 பணக்காரர்களில் ஒருவராக இருந்த இந்தியாவின் கவுதம் அதானி, கடந்த வாரம் முதல் பங்குச்சந்தையில் ஏற்பட்டு வரும் தடாலடி வீழ்ச்சியின் காரணமாக, உலக மெகா கோடீஸ்வரர்கள் வரிசையில் 17-ம் இடத்திற்கு மாறியுள்ளார் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது .
சரிவை கண்ட பங்குகள்:
அமெரிக்காவைச்சேர்ந்த ஹிண்டன்பெர்க் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட பங்குச் சந்தை மோசடி தொடர்பான சில தரவுகளால், அதானி உள்ளிட்ட பலநிறுவனங்களின் பங்குகள் இந்திய பங்குச்சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகிய இரண்டிலும் கடுமையாக வீழ்ச்சியைச் சந்தித்தன. அண்மைக்கால வரலாறு காணாத அளவில், பல பங்குகளில் சரிவுகள் இருந்தன. இதனால், அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள எல்.ஐ.சி, கடன் வழ்ங்கிய எஸ்.பி.ஐ உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்:
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் நிதித்துறை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்றும், உலகளவில் எவ்வளவு பேசப்பட்டாலும், ஒரு சம்பவம், இந்திய நிதிச் சந்தைகள் எப்படி செயல்படுகின்றன என்பதை குறிக்க போவதில்லை என்றும் கூறினார்.
மேலும் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள எல்.ஐ.சி, நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள்தான் முதலீடு செய்துள்ளது. மேலும் நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள்தான் எஸ்.பி.ஐ கடன் வழங்கியுள்ளது என தெரிவித்தார்.
அரசுக்கு சொந்தமான ஆயுள் காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்.ஐ.சி) அதானி குழுமத்தின் கடன் மற்றும் பங்குகளில் ரூ .36,474.78 கோடியை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இந்த தொகை அதன் மொத்த முதலீட்டில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாகவும் எல்.ஐ.சி தெரிவித்துள்ளது.
எஃப்.பி.ஓ. முறை நிறுத்தம்:
அதானி குழுமத்தின் பங்கு சந்தை மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், ரூ.20 ஆயிரம் கோடி நிதி திரட்டலுக்கான எஃப்.பி.ஓ. முறையில் பங்குகளை விற்பனை செய்வதற்கான திட்டத்தை, அதானி குழுமம் நிறுத்தியது.
இது தொடர்பாக கவுதம் அதானி தெரிவித்துள்ளதாவது, ”இழப்புகளில் இருந்து முதலீட்டாளர்களை காக்கவே பங்கு விற்பனை ரத்து செய்யப்பட்டுள்ளது. என்னை பொறுத்தவரை எனது முதலீட்டாளர்களின் நலனே முதன்மையானது. மற்றவை எல்லாம் இரண்டாம்பட்சம் தான். பங்கு விற்பனை ரத்து முடிவு நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. பங்கு விற்பனையை சரியான நேரத்தில் மீண்டும் செயல்படுத்துவோம். பங்கு சந்தைகளில் காணப்படும் ஏற்ற இறக்கத்தால், எஃப்.பி.ஓ.வை தொடர்வது சரியானது அல்ல என முடிவெடுத்தோம்” என விளக்கமளித்துள்ளார். ஆனால், இது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
17வது இடம்:
பட்டியலிடப்பட்ட ஏழு அதானி குழும நிறுவனங்கள் அவற்றின் சந்தை மூலதனத்தில் பாதிக்கும் மேற்பட்டவற்றை இழந்துள்ளன, இது 100 பில்லியன் டாலருக்கும் குறைவாக சுருங்கியது.
அதானி ஆசியாவின் பணக்காரர் என்ற இடத்தையும் இழந்தார், ஃபோர்ப்ஸின் உலகின் பணக்காரர்கள் தரவரிசையில் 17 வது இடத்திற்கு தள்ளப்பட்டார். முன்னதாக எலான் மஸ்க், பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோருக்கு அடுத்தபடியாக அதானி மூன்றாவது இடத்தில் இருந்தார்.