Bank Aadhaar seeding Link: அரசு திட்டங்களின் பணப்பலன் பெற ஆதார் சீடிங்.. வங்கி எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி?
அரசின் பணப் பலன்களைப் பெற சம்பந்தப்பட்ட பயனாளர்களின் ஆதார் எண், தேவையான வங்கிக் கணக்குடன் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியுமாறு அதிகாரிகளால் அறிவுறுத்தப்படுகிறது.

ஆதார் கார்டு என்பது இந்திய மக்களின் அடையாள அட்டைகளில் ஒன்றாக மாறி விட்டது. பிறந்த குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை அனைவருக்கும் அடிப்படை அடையாள சான்றாக ஆதார் உள்ளது. ஆதார் எண் மூலம் இந்தியாவின் எந்தவொரு மூலையில் இருந்தாலும் நம்முடைய தகவல்களை நாம் பெற முடியும். வங்கி தொடங்கி அனைத்து விதமான துறைகளிலும் சேவைகளைப் பெற ஆதார் இணைப்பு அவசியமாகிறது.
இப்படியான நிலையில் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு பல்வேறு விதமான திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்பாட்டில் வைத்துள்ளது. இத்தகைய அரசாங்க திட்டங்களை மில்லியன் கணக்கான இந்திய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக நம்பியுள்ளனர். சில நேரங்களில் இந்த திட்டங்களின் பயன்கள் உரியவர்களுக்கு செல்லாமல் மடைமாற்றம் செய்யப்படுகிறது. இது குற்றச்சாட்டாக எழும் நிலையில் அதனை சரிகட்ட சம்பந்தப்பட்ட பயனாளர்களின் ஆதார் எண் அவர்களின் வங்கிக் கணக்குடன் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியுமாறு அதிகாரிகளால் அறிவுறுத்தப்படுகிறது.
ஆனால் பலருக்கும் இதனை எப்படி செய்ய வேண்டும் என தெரியாது. இணைய தள மையங்கள், அரசின் இ-சேவை மையங்களை நாடிச் செல்கிறார்கள். இதனை நாம் செல்போன் மூலம் எளிதாக செய்யலாம். அதனைப் பற்றி நாம் காணலாம்.
வங்கி - ஆதார் எண் இணைப்பு
நீங்கள் ஏதேனும் ஒரு அரசின் திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்களாக இருந்தால் உங்களை ஏதாவது ஒரு வங்கி அல்லது தபால் நிலையத்தில் கணக்கு தொடங்க சொல்வார்கள். அந்த கணக்குடன் ஆதார் சீடிங் செய்யப்பட்டுள்ளதா என செக் செய்ய கூறுவார்கள். இதனை நீங்கள் ஆதாரின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://uidai.gov.in/ வலைத்தளம் மூலம் அறியலாம். இந்த தளத்தில் நீங்கள் சென்று மொழியை தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர் அதில் 3 ஆப்ஷன்கள் காட்டப்படும். இதில் ஆதார் சர்வீஸ் (Aadhaar Services) என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அதனுள் Aadhaar Linking Status என்ற ஆப்ஷன் காட்டப்படும். அதனை கிளிக் செய்யவும். அதில் Bank seeding status என்ற ஆப்ஷன் காட்டும். அதனை கிளிக் செய்து உள்ளே சென்றால் உங்களின் செல்போன் எண் இணைக்கப்பட்ட ஆதார் எண் பதிவிட வேண்டும். இதனைத் தொடர்ந்து உங்கள் மொபைலுக்கு ஓடிபி வரும். அதனை பதிவிட்டால் நீங்கள் கடைசியாக எந்த வங்கியுடன் இணைத்திருக்கிறீர்களோ அதன் பெயர் காட்டும்.
ஒருவேளை அரசு திட்டத்தின் பலன்களைப் பெற தேவையான வங்கியுடன் இணைக்கப்படவில்லை என்றால் அந்த வங்கி பெயரை இணையத்தில் பதிவிட்டால் (உதாரணமாக sbi aadhaar seeding status bank) நேரடியாக அந்த வங்கி பக்கத்திற்கு சென்று அதில் வழிகாட்டும் முறைகள் காட்டப்பட்டிருக்கும். முந்தைய வங்கியில் இருந்து தற்போது மாற்ற வேண்டிய வங்கிக்கு ஆதார் இணைப்பை மாற்றலாமா என கேட்கப்படும். ஆம் என நாம் கொடுக்கும் பட்சத்தில் 48 மணி நேரத்தில் மாற்றம் நடைபெறும். மறுபடியும் அதனை ஆதாரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் போய் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.





















