Yulu Wynn Scooter: வெறும் 55 ஆயிரம்தான்... இந்தியாவில் அறிமுகமாகிறது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்..! என்னென்ன சிறப்பம்சம்..?
இந்தியாவில் வெறும் ரூ.55 ஆயிரத்திற்கு பூதிய மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு வர உள்ளது.
இந்தியாவில் வெறும் ரூ.55 ஆயிரத்திற்கு புதிய மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு வர உள்ளது. இந்த புதிய ஸ்கூட்டரை யுலு எனும் நிறுவனம், வின் எனும் பெயரில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது.
மின்சார வாகனங்கள்:
அதிகரித்து வரும் மின்சார வாகனங்களின் பயன்பாடு காரணமாக பல்வேறு முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இந்திய சந்தையில் புதுப்புது வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அதோடு சில புதிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும், புதிய மற்றும் மலிவு விலை மின்சார வாகனங்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றன.
அதற்கு இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது, பெங்களூருவை மையமாக கொண்ட யுலு நிறுவனம் இந்திய சந்தையில் மலிவு விலையில் புதிய மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
”வின்” மின்சார ஸ்கூட்டர்:
இதுவரையில் உணவு, மளிகைப் பொருட்கள் போன்றவற்றை டெலிவெரி செய்யும் நபர்களுக்கான வினியோக பணிகளுக்காக யுலு நிறுவனம் வாகனங்களை உற்பத்தி செய்து வந்தது. இந்நிலையில், வின் எனும் பெயரில் புதிய மின்சார ஸ்கூட்டரை உருவாக்கியுள்ளது. அந்த நிறுவனம் சார்பில் மொபிலிட்டி பிரிவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள முதல் வாகன மாடல் இதுதான்.
அறிமுக சலுகையாக புதிய யுலு வின் மின்சார ஸ்கூட்டரின் விலை ஸ்கூட்டர் விலை ரூ. 55 ஆயிரத்து 555 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 999 ஆகும். வினியோகம் மே மாத மத்தியில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக சலுகைகள் முடிவுற்றதும், இந்த வின் மாடல் ஸ்கூட்டரின் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்று உய்ர்த்தப்பட உள்ளது.
பேட்டரி விவரங்கள்:
இந்த ஸ்கூட்டரில் 250 வாட் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 19.3 Ah மாற்றக்கூடிய பேட்டரிகளை பயன்படுத்தலாம். இந்த ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 68 கிலோமீட்டர் தூரம் வரையில் பயணிக்க முடியும். புதிய யுலு வின் ஸ்கூட்டர் பேட்டரி பேக் இன்றி விற்பனை செய்யப்படுவதால் இதன் விலை குறைவாக இருக்கிறது.
பேட்டரியை மாற்றும் வசதி:
யுலு வின் மாடல் கழற்றி மாற்றக்கூடிய பேட்டரிகளை கொண்டிருக்கிறது. இதில் பயன்படுத்தக்கூடிய பேட்டரிகளை பயனர்கள் சந்தா முறையில் பெற்றுக் கொள்ளலாம். இத்துடன் யுமா எனர்ஜி பேட்டரி மாற்றும் நெட்வொர்க்கில் இணைந்து கொள்ளலாம். புதிய வின் மின்சார ஸ்கூட்டர் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்கூட்டரை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
சிறப்பம்சங்கள்:
வின் ஸ்கூட்டர் யுலு மற்றும் மேக்னா நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்பட்டு உள்ளது. யுலு வின் மாடல் டிசைன் அதன் மற்ற மாடல்களில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் ஸ்கார்லெட் ரெட் மற்றும் மூன்லைட் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதுதவிர ஸ்கூட்டரில் ஆப் சார்ந்த சாவி, ஒவர் தி ஏர் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.