PM Modi - Putin: பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் சேர்ந்து சென்ற Toyota Fortuner கார் - இவ்வளவு ஸ்பெஷலா?
இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி அழைத்துச் சென்ற Toyota Fortuner காரின் சிறப்பம்சங்கள் குறித்து கீழே காணலாம்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு நேற்று வந்தார். அவரை டெல்லி விமான நிலையத்திற்கு நேரில் சென்று பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர், பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புதின் இருவரும் இணைந்து ஒரே காரில் பிரதமர் இல்லத்திற்குச் சென்றனர்.
மோடி - புதின் சேர்ந்து சென்ற கார்:
பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் இணைந்து Toyota Fortuner Sigma காரில் பயணித்தனர். இந்த கார் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த காரைப் பற்றி கீழே விரிவாக காணலாம். பிரதமர் மோடி பெரும்பாலும் தனது பயணங்களின்போது Toyota Fortuner கருப்பு நிற காரையே பயன்படுத்தி வருகிறார்.
பிரதமர் மோடி நேற்று புதினுடன் பயணித்த கார் Toyota Fortuner Sigma 4 MT ஆகும். இந்த கார் பிஎஸ் -6 ரகம். சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட மோட்டார் விதிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கார் ஆகும். இது டீசலில் ஓடும் கார் ஆகும்.
சிறப்புகள்:
இந்த கார் கடந்தாண்டு ஏப்ரல் 24ம் தேதி பதிவு செய்யப்பட்டது. இந்த காருக்கு தகுதிச் சான்றிதழ் வரும் 2039ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி வரை உள்ளது. விவிஐபி பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் பொருந்தியது இந்த கார் ஆகும். பிரதமர் மோடி- புதின் இருவரும் வழக்கமான நடைமுறைக்கு பதிலாக இந்த காரில் சென்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இந்த கார் 2.8 லிட்டர் டீசல் எஞ்ஜினை கொண்டது. 3 ஆயிரத்து 400 ஆர்பிஎம் திறன் கொண்டது. 6 கியர்களை கொண்டது. 1600 முதல் 2800 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 2,755 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. டீசலில் ஓடும் ஆற்றல் கொண்டது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 43.67 லட்சம் ஆகும். டாப் வேரியண்ட் விலை ரூபாய் 61.58 லட்சம் ஆகும்.
இந்த காரில் குண்டு துளைக்காத கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. காரின் வேகம் உள்பட அனைத்து வசதிகளும் விவிஐபி தரத்திற்காக இந்த காரில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் பதிவெண் MH01EN5795 ஆகும். டெல்லியில் காற்று மாசு அபாயம் இருப்பதாலும் தற்போது டெல்லியில் பிரதமர் உள்பட உயர் பொறுப்பில் உள்ளிட்ட அனைவரும் காற்று மாசில்லா அல்லது மாசு குறைவான வாகனங்களையே பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர்.
புதினின் கார்:
பொதுவாக ரஷ்ய அதிபர் புதின் தனது பாதுகாப்பிற்காக Aurus Senat காரை பயன்படுத்துவார். அவரது பாதுகாப்பிற்காக பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட கார் இதுவாகும். இந்த கார் ரஷ்யாவின் மாஸ்கோவில் வடிவமைக்கப்பட்ட கார் ஆகும். ரோல்ஸ் ராய்ஸ் காரின் தோற்றத்தில் காட்சி தரும்.





















