Vinfast Sales: எகிற அடித்த வின்ஃபாஸ்ட்.. டெஸ்லாவை பின்னுக்குத் தள்ளி அசத்தல்! அக்டோபரில் இத்தனை யுனிட்கள் விற்பனையா?
Vinfast Sales: இந்தியாவில் தனது புதிய டீலர்ஷிப்புகளை திறந்து விற்பனை விரிவுபடுத்தியுள்ள வின்ஃபாஸ்ட் நிறுவனம், அக்டோபர் மாதத்தில் 131 கார்கள் விற்று தனது விற்பனை எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது.

இந்தியாவில் மின்சார வாகன விற்பனையில் ஃபின்பாஸ்ட் நிறுவனமானது டெஸ்லாவை பின்னுக்கு தள்ளி டாப் 8 இடங்களுக்கு நுழைந்து அசத்தியுள்ளது.
வின்ஃபாஸ்ட் Sales:
இந்தியாவில் தனது புதிய டீலர்ஷிப்புகளை திறந்து விற்பனை விரிவுபடுத்தியுள்ள வின்ஃபாஸ்ட் நிறுவனம், அக்டோபர் மாதத்தில் 131 கார்கள் விற்று தனது விற்பனை எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் வெறும் 40 கார்கள் மட்டுமே விற்ற டெஸ்லாவை முந்தியுள்ளது. மேலும் சில பிற மின்சார வாகன உற்பத்தியாளர்களையும் வின்ஃபாஸ்ட் முந்தி, டாப் 8 இடங்களுக்குள் வந்தது.

டீலர்ஷிப்புகள் அதிகரிக்க திட்டம்
தற்போது வின்ஃபாஸ்டுக்கு இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, குருக்ராம், நொய்டா, மும்பை, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, அகமதாபாத், ஹைதராபாத், சூரத், புனே, விஜயவாடா, விசாகப்பட்டினம், நாக்பூர், ஆக்ரா, லூதியானா, ஜெய்ப்பூர், கொச்சி, புவனேஷ்வர், பரோடா, ராஜ்கோட் ஆகிய நகரங்களில் 24 ஷோரூம்கள் உள்ளன. இதைத் தொடர்ந்து மொத்தம் சுமார் 35 டீலர்ஷிப்புகள் திறக்க வின்ஃபாஸ்ட் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் முழுக்க மின்சார வாகனங்களாக உருவாக்கப்பட்ட VF6 மற்றும் VF7 மாடல்களை மற்ற கார் நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏன் வின்ஃபாஸ்ட்டுக்கு மவுசு?
வின்ஃபாஸ்ட் மற்றும் டெஸ்லா ஆகிய இரு நிறுவனங்களும் இந்திய சந்தையில் வெவ்வேறு விற்பனை யுக்தியுடன் நுழைந்துள்ளன. வின்ஃபாஸ்ட் இந்தியாவில் உற்பத்தி ஆலையும் அதிகமான டீலர்ஷிப்புகளையும் அமைத்துள்ளது. டெஸ்லா தனது கார்களை இறக்குமதி வழியாக கொண்டு வந்துள்ளது. இதனால் சுங்கக் கட்டணங்கள் அதிகரித்து, இந்தியாவில் டெஸ்லா மோடல் Y விலை, உள்ளூரில் தயாரிக்கப்படும் போட்டியாளர்களை விட அதிகமாக உள்ளது.
மாறாக, வின்ஃபாஸ்ட் நிறுவனம் அதன் போட்டியாளர்களை விட குறைந்த விலையில் கார்களை வழங்கி வேகமாக முன்னேறி வருகிறது.

இன்னும் மின்சார வாகனங்கள் இந்தியாவின் மொத்த வாகன சந்தையில் குறைந்த பங்கை மட்டுமே வகித்தாலும், புதிய நிறுவனங்களின் வருகை மற்றும் புதிய மாடல்களின் அறிமுகம் சந்தையை மேலும் விரிவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
VF6 மற்றும் VF7 காரின் விலை எவ்வளவு?
தூத்துக்குடியில் VF6 மற்றும் VF7 மின்சார கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.VF6 காரின் அடிப்படை மாடலின் தொடக்க விலை ரூபாய் 16.49 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது. VF7 காரின் தொடக்க விலை ரூபாய் 20.89 லட்சம் ஆகும். அதிகபட்சமாக இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 25.49 லட்சம் வரை விற்பனையாக உள்ளது.
குவியும் ஆர்டர்கள்:
வின்பாஸ்ட் நிறுவனத்தின் கார்களை வாங்குவதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடந்துள்ளது. ஆண்டுக்கு 50 ஆயிரம் கார்களை தூத்துக்குடியில் தயாரிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த தயாரிப்பை மேலும் அதிகரிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த வின்ஃபாஸ்ட் காரை வாங்குவதற்கு நேபாளம், இலங்கை, பூடான், மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் இருந்தும் முன்பதிவு குவிந்து வருகிறது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், தூத்துக்குடியில் இருந்து மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் நீடித்த காலத்திற்கு ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் வின்ஃபாஸ்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் மின்சார கார்களின் உற்பத்தியில் டாடா, மஹிந்திரா ஆகிய முன்னணி நிறுவனங்கள் உள்ளன. மின்சார கார்கள் வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் உள்ள நிலையில், தற்போது வின்ஃபாஸ்ட் நிறுவனமும் சந்தையில் களமிறங்கியுள்ளது. போட்டி நிறுவனங்களை சமாளித்து இந்தியாவில் வின்ஃபாஸ்ட் கார்களின் விற்பனை வெற்றிகரமாக தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
புதிய கார்கள் வருகை:
இரு நிறுவனங்களும் இந்திய சந்தையில் மேலும் பல கார்கள் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக, வின்ஃபாஸ்ட் கடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய சில மாடல்களையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






















