Verge Mika Hakkinen: மின்சார பைக்குகளின் டாடி.. ஒருமுறை சார்ஜ் செய்தால் 563 கி.மீ ரேஞ்ச்.. விலை இவ்வளவா?
வெர்ஜ் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் ஒருமுறை சார்ஜ் செய்தால், 563 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் புதிய மின்சார மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
வெர்ஜ் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் ஒருமுறை சார்ஜ் செய்தால், 563 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் புதிய மின்சார மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. அதோடு, விலை மற்றும் வெளியீட்டு விவரங்களையும் தெரிவித்துள்ளது.
ஹகினென் சிக்னேச்சர் எடிஷன்:
உலக அளவில் அதிகரித்து வரும் மின்சார வாகனங்களின் தேவைக்கு ஏற்ப, பல்வேறு முன்னணி நிறுவனங்களும் புதுப்புது மின்சார வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில், பின்லாந்தை சேர்ந்த மின்சார மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான வெர்ஜ் மோட்டார்சைக்கிள்ஸ் தனது லிமிடெட் மைகா ஹகினென் சிக்னேச்சர் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. வெர்ஜா மைகா ஹகினென் சிக்னேச்சர் எடிஷன் மாடல் வெர்ஜ் மற்றும் மைகா ஹகினென் ஆகிய நிறுவனங்களின் கூட்டணியை பிரதிபலிக்கும் வகையில் அமைந்து உள்ளது. இரண்டு முறை F1 பந்தயம் வென்ற மைகா ஹகினென் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதோடு, இந்த பைக்கின் வடிவமைப்பு பணிகளில் உதவியாக இருந்துள்ளது.
மோட்டார் விவரம்:
வெர்ஜ் மைகா ஹகினென் சிக்னேச்சர் எடிஷன் மாடலில் ஹப்லெஸ் மோட்டார் இடம்பெற்றுள்ளது. இது 136.78 ஹெச்பி பவர், 1000 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த வாகனம் மணிக்கு 100 கிலோமீட்டர் என்ற வேகத்தை வெறும் 3.5 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. அதிபட்சமாக இந்த வாகனத்தை மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்த முடியும்.
பேட்டரி விவரம்:
மைகா ஹகினென் சிக்னேச்சர் எடிஷன் மாடலில் 20.2 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி பேக் உள்ளது. இந்த பைக்கை முழு சார்ஜ் செய்தால் 563 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி 25 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. வெறும் 35 நிமிடங்களிலேயே இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும் என கூறப்படுகிறது.
வடிவமைப்பு:
வெர்ஜ் மோட்டார்சைக்கிள்ஸ்-இன் TS ப்ரோ மோட்டார்சைக்கிளை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் மைகா ஹகினென் எடிஷன் டார்க் கிரே மற்றும் சில்வர் டூயல் டோன் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இந்த பெயிண்ட் ஸ்கீம்1998 மர்றும் 1999 ஆண்டுகளில் மைகா ஹகினென் பயன்படுத்திய மெக்லாரென் ஃபார்முலா 1 மாடல்களை நினைவூட்டும் வகையில் உள்ளது. ஹக்கினெனின் சிக்னேச்சர் பைக்கின் மையப்பகுதியின் எடை குறைவாக இருப்பது, ரைடர்களுக்கு நிலைத்தன்மையை அதிகரிக்கிறது. கூடுதலாக, பைக்கில் தனிப்பயன் மிட்நைட் சஸ்பென்ஷன் மற்றும் பிட்ச் பிளாக் ஷாக் அப்சார்பர்கள் உள்ளன.
விலை விவரம்:
ஸ்பெஷல் எடிஷன் அடிப்படையில், இந்த பைக் மாடல் மொத்தமாகவே 100 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதன் விலை 80 ஆயிரம் யூரோக்கள் அதாவது இந்திய மதிப்பில் 71 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பைக்கை ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்து பெற முடியும்.