7 Seater Hybrid SUV: கம்மி விலை - ஹைப்ரிட் இன்ஜின், புதிய 7 சீட்டர் எஸ்யுவிகள் - போட்டி போட்டு குவியும் ஆப்ஷன்கள்
Upcoming 7 Seater Hybrid SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதியதாக ஹைப்ரிட் இன்ஜின்களுடன், அறிமுகமாக உள்ள புதிய 7 சீட்டர் கார்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Upcoming 7 Seater Hybrid SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹைப்ரிட் இன்ஜின்களுடன், ரூ.15-30 லட்சம் வரையிலான பட்ஜெட்டில் அறிமுகமாக உள்ள புதிய 7 சீட்டர் கார்கள் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
7 சீட்டர் கார்களுக்கான தேவை:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 7 சீட்டர் எஸ்யுவி கார்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெரிய குடும்பங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்பவர்கள், அழகிற்கு மட்டுமின்றி வாகனம் வழங்கக் கூடிய இடவசதி மற்றும் சொகுசு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதன் காரணமாகவே 7 சீட்டர் கார்களை உற்பத்தி செய்ய, கார் நிறுவனங்களும் ஆர்வம்செலுத்த தொடங்கியுள்ளன. அதன்படி, புதிய கார்கள் விரைவில் இந்திய சந்தைக்கு வரவுள்ளன. அந்த வகையில் மஹிந்திரா, ரெனால்ட், ஹுண்டாய் மற்றும் ஹோண்டா நிறுவனங்களின் புதிய கார்கள் விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளன.
1. மஹிந்திரா XUV700 ஃபேஸ்லிஃப்ட்:
மஹிந்திரா நிறுவனம் தனது பிரபலமான எஸ்யுவி ஆன XUV700 கார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனில் பணியாற்றி வருகிறது. இந்த காராணது XUV7X0 என்ற பெயரில் அடுத்த ஆண்டு சந்தைப்படுத்தப்பட உள்ளது. இந்த பெயரை ஏற்கனவே இந்த பெயரை பதிவு செய்துள்ளது. உட்புறம் மற்றும் வெளிப்புறம் என இரண்டிலும் புதிய டிசைனை பெறலாம். அதேநேரம், தற்போதுள்ள வாகனங்களில் இடம்பெற்றிருக்கும் அதே 2.2 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய எடிஷனின் விலை ரூ.14.49 லட்சத்தில் தொடங்க, புதிய எடிஷனின் தொடக்க விலை ரூ.15 லட்சமாக உயர்த்தப்படலாம்.
2. ரெனால்ட் 7 சீட்டர் “பொரியல்”
ரெனால்ட் நிறுவனமும் தனது புதிய 7 சீட்டர் எஸ்யுவி கார் மாடலை உற்பத்தி செய்து வருகிறது. இது பொரியல் (Boreal) என்ற பெயரில் சந்தைப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. Dacia Bigster வாகனத்தின் அடிப்படையிலான இந்த கார், டஸ்டர் மாடலுக்கான பிளாட்ஃபார்மையே பயன்படுத்துகிறது. ஆனால், டஸ்டரை காட்டிலும் கூடுதல் நீளமானதாகவும், வீல்பேஸ் பெரியதாகவும் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரானது 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் வெர்ஷன் இன்ஜினை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில், மலிவு விலை 7 சீட்டர் ஆப்ஷனாக இந்த கார் இந்திய சந்தையை அடையும் என கூறப்படுகிறது.
3. ஹோண்டா 7 சீட்டர்
ஹோண்டா நிறுவனம் தயாரித்து வரும் அதன் புதிய 7 சீட்டர் எஸ்யுவி வரும் 2027ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தியாவிலேயே ஜப்பான் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த குழுவினரால் உருவாக்கப்பட்ட இந்த காரானது, அந்த நிறுவனத்தின் புதிய PF2 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட உள்ளது. இதன் அளவானது ஹோண்டாவின் எலிவேட் கார் மாடலை விட பெரியதாக இருக்கும் என தெரிகிறது. இந்த காரானது 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் வெஷன் இன்ஜினை கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
4. ஹுண்டாய் 7 சீட்டர்
இந்த போட்டியில் ஹுண்டாய் மட்டும் விதிவிலக்கு அல்ல. மூன்று வரிசை இருக்கைகளை கொண்ட ஹைப்ரிட் எஸ்யுவியை Ni1i என்ற கோட்நேமில் அந்நிறுவனம் தயாரித்து வருகிறது. நிறுவன போர்ட்ஃபோலியோவில் அல்கசார் மாடலுக்கு மேலே நிறுத்தப்பட்டு, இந்திய சந்தையில் மஹிந்திராவில் XUV700 மற்றும் டாடா சஃபாரி கார் மாடல்களுடன் போட்டியிட உள்ளது. வரும் 2027ம் ஆண்டு இந்த கார் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் சர்வதேச கார் மடல்களில் இருப்பதை போன்று, 1.6 லிட்டர் ஹைப்ரிட் இன்ஜினில் ஹைப்ரிட் அம்சத்தை சேர்க்கலாம் அல்லது 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினும் ஹைப்ரிட் அம்சத்தை பெறலாம்.
5. கியா 7 சீட்டர்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வலுவாக காலூன்ற முயலும் கியா நிறுவனமும் தனது 7 சீட்டர் கார் மாடலில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த வாகனமானது சொரெண்டோ எஸ்யுவியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. வரும் 2027ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய காரானது MQ4i என்ற கோட்நேமை கொண்டுள்ளது. கியாவின் செல்டோஸ் கார் மாடலுக்கு மேலே புதிய கார் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த கார் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினில் ஹைப்ரிட் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. இதே இன்ஜின் தான் அடுத்து வரவுள்ள புதிய தலைமுறை செல்டோஸிலும் பயன்படுத்தப்பட உள்ளன.
6. ஃபோக்ஸ்வேகன் 7 சீட்டர்
இதனிடையே, டைரோன் எனும் கோட்நேம் கொண்ட புதிய 7 சீட்டர் எஸ்யுவியை ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் தயாரித்து வருகிறது. வரும் பண்டிகை காலத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. டைகுவான் காரின் பெரிய வெர்ஷனாக உருவாகும் இந்த கார், MQB EVO பிளாட்ஃபார்ம் அடிப்படையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் சக்தி வாய்ந்த 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட உள்ளது. இது ஆல் வீல்ட்ரைவ் அம்சத்துடன் 7 ஸ்பீட் DSG கியர்பாக்ஸை கொண்டிருக்கலாம். இதன் விலை சுமார் 50 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம்.
அதிகரிக்கும் போட்டி
புதிய வாகனங்களின் அறிமுகத்தால் 7 சீட்டர் கார் பிரிவு மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற உள்ளது. ஒவ்வொரு நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு புதியதாக வழங்க முயல்கின்றன. சில நிறுவனங்கள் தொழில்நுட்பம் மற்றும் அம்சங்கள், சில நிறுவனங்கள் எரிபொருள் திறன் மற்றும் ஹைப்ரிட் தொழில்நுட்பங்கள் மூலம் கவனம் ஈர்க்கின்றன. அடுத்த சில வருடங்களில் இந்த பிரிவு புதிய மாடல்களால் இதுவரை இல்லாத உச்சத்தை எட்ட உள்ளது.






















